முகப்பு
தமிழ்நாடு

எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை விடுத்திருப்பது பற்றி...

Updated On : 17 ஏப்ரல் 2026, 10:34 am IST
முதல்வர் ஸ்டாலின் - x | MK Stalin
பகிர்:

எதிர்ப்பை மீறி தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளை தமிழ்நாட்டில் சந்திக்க வேண்டியிருக்கும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை மீண்டும் எச்சரித்துள்ளார்.

மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா உள்ளிட்டவற்றை மத்திய அரசு வியாழக்கிழமை தாக்கல் செய்த நிலையில், இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இதில், தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று காலை கருப்புக் கொடியேற்றி, நகலை எரித்துப் போராடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இன்று மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:

“தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும்!

தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள்.

நம்முடைய கடும் எதிர்ப்பினையும் போராட்டத்தினையும் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என பிரதமரும் உள்துறை அமைச்சடும் நேற்று நாடாளுமன்றத்தில் வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர்.

ஆனால், சொல் ஒன்று – செயல் வேறு என்பதாக, இவர்கள் தாக்கல் செய்துள்ள சட்டமுன்வடிவு முழுக்க முழுக்க ஏமாற்றுத் திட்டமாக இருக்கிறது. இதை நம்பவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது எனத் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.

இந்தச் சட்டமுன்வடிவில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், இவர்கள் நினைத்தால் நினைத்த நேரத்தில், நினைத்த முறையில், எப்போது வேண்டுமானாலும் எதிர்காலத்தில், இவர்களுக்குச் சாதகமான வகையில், இந்திய மாநிலங்களின் தொகுதியளவை மாற்றியமைத்துக் கொள்வதற்கான வழிவகைகள் இந்தக் கருப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. பெரும் சூழ்ச்சியை உள்ளடக்கியதாக இந்தச் சட்டமுன்வடிவு இருக்கிறது.

அவசரகதியில் இதனை நிறைவேற்றக் கூடாது. மத்திய அரசு இதனை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும். எண்ணிக்கை பலம் இருக்கிறது என்ற திமிரில், எங்களின் எதிர்ப்பை மீறி இதனை நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளைத் தமிழ்நாட்டில் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

நேரு, இந்தியைத் திணிக்க மாட்டோம் என்றார், இருந்தவரை அந்த உறுதிமொழியைக் காப்பாற்றினார். ஆனால், தற்போதைய மத்திய ஆட்சியாளர்களோ மாநில உரிமைகளைக் காப்பாற்றுவோம் எனச் சொல்லிக்கொண்டே அதனைச் சில்லு சில்லாக நொறுக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர்.

நாம் கோருவது, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, வாஜ்பாய் அரசியலமைப்புச் சட்டத்திலேயே திருத்தம் செய்து, 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைத்ததைப் போன்ற சட்டப் பாதுகாப்பு.

தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய பா.ஜ.க. அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

If the bill is passed despite opposition, there will be consequences! — Chief Minister Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.