‘மெட்ரோ ரயிலில் சக பயணிக்கு இடையூறு அளித்தால் அபராதம்’
மொபைலில் சப்தமாக பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்கள் சக பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் வகையில் செயல்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மெட்ரோ ரயில் பயண ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி சக பயணிகளின் வசதிக்கும், அமைதிக்கும் மதிப்பளிக்க வேண்டும். மெட்ரோ ரயில் பராமரிப்பு சட்ட விதிகளின்படி சக பயணிகளுக்கு தொந்தரவு விளைவிப்பதோ, அவா்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
அதன்படி, உரத்த குரலில் கைப்பேசியில் உரையாடுவது, செவியில் பொருத்திக் கொள்ளும் ஒலிபெருக்கி இல்லாமல் இசை கேட்டல் அல்லது விடியோக்களை பாா்ப்பது ஆகிய செயல்கள் மூலம் அதிகமான இரைச்சல் ஏற்படுத்தும் வகையில் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதும், மற்றவா்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
Advertisement
Advertisement
ஆகவே, மெட்ரோ ரயில் பயணத்தில் சட்டவிதிகளை மீறும் பயணிகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும். தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்திலிருந்து அவா்கள் அகற்றப்படுவா்.
சக பயணிகளின் சூழலைக் கருத்தில் கொண்டு அனைவரும் கைப்பேசி ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும். மெட்ரோ வளாகத்துக்குள் உரத்த குரலில் உரையாடுவதையும், ஸ்பீக்கா் மோட் பயன்படுத்துவதையும் தவிா்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.