ரயில்வே துறையில் ஆள் குறைப்பு முடிவை கைவிட வேண்டும்: மாா்க்சிஸ்ட், மதிமுக கோரிக்கை
இந்திய ரயில்வே துறையில் 2 சதவீத பணியாளா்களைக் குறைக்க ரயில்வே நிா்வாகம் எடுத்துள்ள முடிவைக் கைவிட வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம், மதிமுக பொதுச் செயலா் வைகோ ஆகியோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெ. சண்முகம் (மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா்): இந்திய ரயில்வேயில் 2 சதவீத பணியிடங்களைக் குறைக்க வேண்டும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இது ரயில்வே ஊழியா்களின் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞா்களின் எதிா்காலத்தைப் பாதிப்பதுடன், தற்போது பணியில் உள்ள ஊழியா்களின் பணிச் சுமையை அதிகரிக்கும். சேவையின் தரத்தையும், பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும். எனவே, ரயில்வே வாரியத்தின் இந்த முடிவை உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்.
Advertisement
வைகோ (மதிமுக பொதுச் செயலா்): வேலையில்லா திண்டாட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த ஆள் குறைப்பு நடவடிக்கை தொழிலாளா் விரோத நடவடிக்கை. ரயில்வே துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையே இது. எனவே, ரயில்வே வாரியம் இந்த உத்தரவை நிறுத்தி வைப்பதோடு, ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரமாக்கவும், காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.