கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைக் கண்டு யாரும் கலங்கத் தேவையில்லை என இபிஎஸ் வேண்டுகோள்...
கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் பொய்யான தகவல்களைப் பரப்பி மக்களை திசை திருப்பும் வேலையை திமுக செய்து வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 30) விமர்சித்தார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி,
''எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு அதிமுக ஆட்சி மலர்வது நிச்சயம். திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது.
Advertisement
Advertisement
கருத்துக் கணிப்புகள் என்ற பேரில் பொய் தகவல்களைப் பரப்பி, தமிழக மக்களையும் அதிமுக தொண்டர்களையும் திசை திருப்பும் வேலையை, திமுக திட்டமிட்டு செய்து வருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைக் கண்டு யாரும் கலங்கத் தேவையில்லை.
நமக்கு எதிரான கருத்துக் கணிப்புகளைக் கண்டு யாரும் மனம் தளர வேண்டாம். கருத்துக் கணிப்புகள் அப்படியே நடந்ததாக வரலாறு கிடையாது. எல்லா கருத்துக் கணிப்புகளையும் உடைத்தே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை ஆட்சி அமைத்திருக்கிறது.
சில கருத்துக் கணிப்புகள் திமுக ஆட்சி தொடரும் என்றது; சில கருத்துக் கணிப்புகள் மட்டுமே அஇஅதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தன.
2016-லும் இதேபோன்று கருத்துக் கணிப்பு சொல்லப்பட்டது. அதைப் பொய்யாக்கி மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமைத்தது. இது தான் வரலாறு. ஒவ்வொரு தேர்தலின்போதும் கருத்துக் கணிப்புகளை உடைத்தெறிந்து, வீறுகொண்டு எழுவதுதான் அதிமுகவின் தனித் தன்மை.
இந்தத் தேர்தலிலும் அத்தகைய வெற்றி கண்டிப்பாக தொடரும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 210 தொகுதிகளில் உறுதியாக வெல்லும். கழகம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
அதேநேரம் 'தோற்கப்போகிறோம்' என்பது ஸ்டாலினுக்குத் தெரிந்துவிட்டது. எனவே, இப்படியான கருத்துக் கணிப்புகளை திட்டமிட்டு வெளியிடுவதற்கு பின்னணியில் சூழ்ச்சி இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
அதாவது, திமுக வெல்லப்போகிறது என்ற மாய பிம்பத்தை உருவாக்கி, அதன் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்வதற்கும், கலவரம் செய்து தமிழகத்தில் குழப்பத்தை உருவாக்குவதற்கும் திமுக-வினர் முயற்சி செய்வார்கள்.
எனவே, 4.5.2026-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் நம் கழகத் தொண்டர்கள், பூத் ஏஜெண்ட்டுகள், வேட்பாளர்கள், நிர்வாகிகள், தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் அனைவரும் அதீத கவனத்துடன் செயல்பட வேண்டும்.
மக்களின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் மட்டுமே அல்லும் பகலும் அயராது பாடுபட்டுவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நிச்சயம் மலரும்'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tn Election 2026 Opinion Polls Are a Diversionary Tactic EPS Criticizes
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.