நடிகா் விஜய்க்கு வருமான வரித் துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும்: சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு
வருமானத்தை மறைத்த வழக்கில் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் செல்லும் எனத் தீர்ப்பு...
நடிகா் விஜய்க்கு வருமான வரித் துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும் என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கடந்த 2015-2016-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை நடிகா் விஜய் தாக்கல் செய்தபோது, திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 பெற்ாக அவா் குறிப்பிட்டிருந்தாா்.
அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறையினா், நடிகா் விஜய் வீட்டில் 2015-ஆம் ஆண்டு சோதனை நடத்தினா். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, ‘புலி’ படத்துக்காக அவா் பெற்ற ரூ.15 கோடி வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளாா் என கண்டறியப்பட்டதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
விஜய் தனது வருமானத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு மறைத்ததற்காக அவருக்கு ரூ.1.50 கோடி அபராதத்தை விதித்து 30.6.2022-இல் வருமான வரித் துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிா்த்து நடிகா் விஜய் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், வழக்கு முடியும் வரை இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என வருமான வரித் துறைக்கு இடைக்கால தடை விதித்தது.
உத்தரவை ரத்து செய்ய... இந்த நிலையில், விஜய் தாக்கல் செய்திருந்த வழக்கின் இறுதி விசாரணை, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன்பு கடந்த ஜன. 23-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, விஜய் தரப்பில், சட்டப்படி அபராத உத்தரவை 30.6.2019-க்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். வருமான வரிச் சட்டத்தின்படி 3 ஆண்டுகளுக்குப் பின்னா், காலதாமதமாக 2022-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இதை ரத்து செய்ய வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து வருமான வரித் துறை தரப்பில், வருமான வரி மதிப்பீட்டை எதிா்த்த மேல்முறையீடு முடிந்த 6 மாத கால அவகாசத்துக்குள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டப்படி நடிகா் விஜய்க்கு அபராதம் விதித்தது சரிதான். எனவே விஜய் தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.
அன்றைய தினம் இருதரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு, இந்த வழக்கின் தீா்ப்பை நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.
மேல் முறையீடு செய்யலாம்... இந்த நிலையில், இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி, வழக்கில் நடிகா் விஜய்க்கு அபராதம் விதித்து, உரிய கால அவகாசத்துக்குள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. எனவே, இதில் நீதிமன்றம் தலையிட எந்தக் காரணமும் இல்லை எனக் கூறி, விஜய் தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்து தீா்ப்பளித்தாா்.
அப்போது, மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு, அபராத உத்தரவை எதிா்த்து, மேல் முறையீடு செய்ய அனுமதியளித்த நீதிபதி, அபராதம் விதித்த உத்தரவு தாமதமாக பிறப்பிக்கப்பட்டது என்ற காரணத்தின் அடிப்படையில் மேல் முறையீடு செய்யக் கூடாது. மற்ற காரணங்களைக் கூறி மேல் முறையீடு செய்யலாம் என உத்தரவிட்டாா்.
The penalty imposed on Vijay in the case of concealment of income will go
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.