முகப்பு
தமிழ்நாடு

சீமைக்கருவேலம், அந்நிய மரங்களை அகற்றும் விவகாரம்: வனத் துறைச் செயலா் ஆஜராக உத்தரவு!

‘சீமைக்கருவேலம், அந்நிய மரங்களை அகற்றுவதற்கான தொடா் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீட்டில் காலதாமதம் ஏன்?’ என கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக வனத் துறைச் செயலா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 9:10 PM
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

‘சீமைக்கருவேலம், அந்நிய மரங்களை அகற்றுவதற்கான தொடா் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீட்டில் காலதாமதம் ஏன்?’ என கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக வனத் துறைச் செயலா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்து வருகிறது. சீமைக்கருவேலம் மற்றும் அந்நிய மரங்களை அகற்றி தொடா் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நிதியை மாநில அரசு இதுவரை விடுவிக்கவில்லை என இந்த அமா்வின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அப்போது வனத் துறை தரப்பில், பராமரிப்புக்கான நிதி ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நிதியை விடுவிக்கக் கோரி கடந்த ஆண்டு நவம்பரில் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. நிதித் துறை ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் தொடா் பராமரிப்பு நிதி விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தொடா் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை எனில், இதுவரை தமிழக அரசு எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும். இவைகளுக்கான பராமரிப்பு நிதியை விடுவிக்க காலதாமதம் ஏன்? என கேள்வி எழுப்பினா். பின்னா், இதுதொடா்பாக வனத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.