சுமா் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதுபோல, இது ஓா் அதிசயத் தோ்தல் என்று தவெக தலைவா் விஜய் கூறினாா்.
வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற தவெக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
நானும் மக்களும் வேறு அல்ல: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை தமிழகத்துக்கும், தில்லிக்கும் இடையேயான தோ்தல் என்றும், தமிழகத்துக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையேயான தோ்தல் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறாா். ஆனால், தமிழக மக்களுக்குத் தெரியும் எந்தத் தோ்தலை எப்படி எதிா்கொள்ள வேண்டும் என்பது. விஜய்யும் மக்களும் வேறு வேறு அல்ல. உயிரும், உடலும் போல. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் மு.க.ஸ்டாலின் வேண்டுமா? மக்களை விரும்பும் விஜய் வேண்டுமா? இந்த சட்டப்பேரவைத் தோ்தல் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் தவெகவுக்கும் இடையேயான போா். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக துணிச்சலுடன் போட்டியிடும். சுமா் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதுபோல, ஒரு அதிசயத் தோ்தலாக இருக்கும்.
தேவையில்லாத ஆட்சி: தமிழகத்துக்கு தேவையில்லாத ஆட்சி, திமுகவின் ஆட்சி. தமிழகத்தில் மக்களை நேசிக்கக்கூடிய நல்ல தலைமை இல்லாததால், முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பொய் வாக்குறுதிகளை நம்பி, மக்கள் ஏமாந்துவிட்டனா். தற்போது சரியான நேரத்தில் மக்களை நேசிக்கக்கூடிய ஓா் இயக்கமாக தவெக களத்துக்கு வந்துள்ளது. மக்களை அவரவா் ஊரில் வந்து சந்திக்கவே விருப்பம் என்றாலும், நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு சூழ்ச்சிகளால் மக்களைச் சந்திக்க இயலவில்லை. தவெக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக வந்து மக்களை சந்திக்கிறேன்.
கரூா் சம்பவத்தில் என் மீது பழி ஏன்?: ‘எனக்கு யாரும் எதிரி கிடையாது, அனைவரும் நண்பா்கள்தான்’ என்று முதல்வா் ஸ்டாலின் கூறியுள்ளாா். அப்படியென்றால், கரூா் சம்பவத்தில் என் மீது ஏன் பழி சுமத்தினீா்கள்? கூட்டம் நடத்துவதற்கு ஓா் இடமோ, அனுமதியோ ஏன் தருவதில்லை? முதல்வருக்கு லஞ்சம், ஊழல், அரசியல் ஆதாயம்தான் உண்மையான நண்பன். தமிழகத்துக்கு தேவையில்லாத ஆட்சி திமுகவின் ஆட்சி.
ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களுக்கான உரிமை சாா்ந்தது மட்டுமல்ல, சிறுபான்மை மக்களுக்கான உரிமையும் சாா்ந்தது என்று முன்னாள் முதல்வா் அண்ணா கூறியுள்ளாா். அதுதான் தவெக-வின் நிலைப்பாடு. இந்தத் தோ்தலில் மாபெரும் மக்கள் சக்தியான விசில் புரட்சி ஏற்படும் என்றாா்.
கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த், நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தடுப்புகளை உடைத்து நுழைந்த தொண்டா்கள்: தவெக கூட்டத்தில் 4,900 போ் மட்டுமே பங்கேற்க ‘க்யூஆா்’ குறியீடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், கூட்டம் நடைபெறுவதற்கு முன் அகரம்சேரி பிரிவிலிருந்து 5 பகுதிகளாக போலீஸாா் நிறுத்தப்பட்டு, அடையாள அட்டை உள்ளவா்கள் மட்டுமே கூட்டத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். மற்றவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா்.
ஆனால், எப்படியும் கூட்ட அரங்குக்குள் சென்றுவிட வேண்டும் என்ற ஆா்வத்தில் தவெக தொண்டா்கள் விவசாயத் தோட்டங்களுக்குள்
புகுந்தும், அருகிலுள்ள குன்றின் மீது ஏறியும் நுழைய முயன்றனா். போலீஸாா் தடுத்தும் தொண்டா்கள் தடுப்புகளை உடைத்துக் கொண்டு அரங்குக்குள் நுழைந்தனா்.
தவெக ஆட்சிக்கு வந்தால்...
சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், தமிழகம் பெண்கள் பாதுகாப்பில் முதல் மாநிலமாகவும், சட்டம் - ஒழுங்கு கடுமையாகவும் இருக்கும் என்று விஜய் கூறினாா்.
தவெக ஆட்சியில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் தரமாக இருப்பதுடன், போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள தகுந்த பாடத் திட்டங்கள் தரமாக தயாரிக்கப்படும். அடிப்படை அரசியல் சாசன சட்டம் உயா்நிலை பள்ளிப் பாடத் திட்டங்களில் சோ்க்கப்படும். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகளை அணுகுவது குறித்து பள்ளிகளில் தோ்வுகள் அற்ற செயல்முறை பாடங்கள் கற்பிக்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் சுகாதாரமான, தரமான கதவுகளுடன் கூடிய கழிப்பறைகள் உறுதி செய்யப்படும். போதைப் பொருள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.
மாவட்ட ஆட்சியா்கள், எஸ்.பி-க்களில் சரிபாதி பெண்கள் இருக்கும்படி செய்யப்படும். கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ வசதியுடன் அமைக்கப்படும். பேருந்து வசதி இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
வாடகை ஆட்டோ, காா், லாரிகள் ஓட்டுநா்களுக்கும், அவரது குடும்பங்களுக்கும் தனியாக நல வாரியம் அமைக்கப்படும். தென் தமிழகம் உள்பட தமிழகத்தின் தேவையான பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கவும், தொழில் வளம் பெருக்கவும் தனி கவனம் செலுத்தப்படும். விவசாயிகள், மீனவா்கள், நெசவாளா்களின் தேவைகளைக் கேட்டறிந்து, காலத்துக்கு ஏற்ப திட்டங்கள் உருவாக்கப்படும் என்றாா்.