தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர சுமார் 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்(எஸ்ஐஆர்) பணிகள் முடிவடைந்து கடந்த டிச. 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது.
இதில், எஸ்ஐஆருக்கு முன்பு தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். எஸ்ஐஆர் நடவடிக்கைகளில் மொத்தம் 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணி வருகிற ஜன. 18 வரை நடைபெறுகிறது.
இதையொட்டி தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க 7,37,807 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து 9,535 பேரை நீக்க விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.
வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.
இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 12.43 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விட்டுப் போனவர்கள், நீக்கப்பட்டவர்களுக்கு டிச. 27, 28 தேதிகளைத் தொடர்ந்து ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.