பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட'த்தை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் பெரிதும் விரும்பிய கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், ஒய்வூதிய நிதியத்திற்குத் தேவையான பயனாளிகளின் 10% பங்களிப்பு -- ஆகிய இரண்டு முக்கிய கருத்துக்களைக் கொண்டு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டம் (TAPS) வரையப்பட்டுள்ளது.
அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் அரசின் நோக்கத்தை நான் வரவேற்றுப் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் ஓய்வூதிய நிதியத்திற்குப் பயனாளிகளின் பங்களிப்பு அவசியம் என்பதை ஏற்றுக் கொண்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாராட்டுகிறேன்.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) விட தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) சில அம்சங்களில் கூடுதலான சலுகைகளை அளிக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
எந்தப் பிரச்னையையும் திறந்த மனதோடும் நல்லுணர்வோடும் அணுகினால் ஓர் இணக்கமான தீர்வைக் காண முடியும் என்பதற்குத் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) ஒரு சிறந்த சான்று. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.