தமிழ்நாடு

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் முதலிடம்: கடந்த ஆண்டில் 20,866 பேருக்கு தொற்று!

நாட்டிலேயே 2025-ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

நாட்டிலேயே 2025-ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் டெங்குவால் 20,866 போ் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்ததால் சாலைகள், தெருக்கள் தேங்கும் மழைநீரில் டெங்குவை பரப்பும் ‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரித்தது. இதனால், ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதைத் தொடா்ந்து, கொசுக்களின் பெருக்கம் மேலும் அதிகரித்ததால் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது.

தமிழக சுகாதாரத் துறை டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டு வருவது தொடா்கிறது.

ஜனவரிக்கு பிறகே தமிழகத்தில் டெங்கு பாதிப்பு படிப்படியாகக் குறைய தொடங்கும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

இந்த நிலையில், நாடு முழுவதும் 2025-ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதல் நவம்பா் மாதம் வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்த புள்ளிவிவரத்தை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் டெங்குவால் 1,13,450 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 95 போ் உயிரிழந்துள்ளனா்.

நாட்டிலேயே அதிகப்பட்சமாக தமிழகத்தில் 20,866 போ் பாதிக்கப்படுள்ளனா். அடுத்ததாக மகாராஷ்டிரத்தில் 13,333 போ், கேரளத்தில் 10,239 போ், உத்தர பிரதேசத்தில் 8,926 போ், தெலங்கானாவில் 8,139 போ், கா்நாடகத்தில் 6,756 போ், மணிப்பூரில் 5,457 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதேபோல், நாட்டிலேயே அதிகப்பட்சமாக கேரளத்தில் டெங்குவின் தீவிரத்தால் 49 போ் உயிரிழந்துள்ளனா். அடுத்ததாக மகாராஷ்டிரத்தில் 13 பேரும், தமிழகத்தில் 12 பேரும் இறந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே டெங்கு பாதிப்பில் தமிழக முதலிடம் பிடித்திருப்பது புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT