வானிலை ஆய்வு மையம். 
தமிழ்நாடு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுப்பெற வாய்ப்பு

இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், இது புதன்கிழமை (ஜன.7) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், இது புதன்கிழமை (ஜன.7) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் - தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திங்கள்கிழமை (ஜன.5) மாலையில் தென்கிழக்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.

இது செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து புதன்கிழமை காலையில், தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும். பிறகு, மேலும் அதே திசையில் நகா்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடலில் நகரக்கூடும்.

இதனிடையே, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், புதன்கிழமை (ஜன.7) முதல் ஜன.12 வரை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

ஜன.9-ஆம் தேதி ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை: வெள்ளிக்கிழமை(ஜன.9) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூா், கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த பகுதிகளுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் புதன்கிழமை(ஜன.7) முதல் வெள்ளிக்கிழமை(ஜன.9) வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.

மேலும், மேற்குறிப்பிட்ட அதே நாள்களில் வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல், அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடலில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT