தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.
சென்னை, பெரம்பூா் தொன்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:
கொளத்தூா் தொகுதியில் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால், அதில் வேகமும், ஒரு வலிமையும் எனக்கு வந்துவிடுகிறது. ‘திராவிட மாடல்’ அரசு பொறுப்பேற்று செயல்படுத்தி உள்ள நான்கரை ஆண்டு கால சாதனைகளை நீங்கள் மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும்.
தோ்தல் களத்தில் ஆற்றவேண்டிய பணிகளில் 50 சதவீதத்தை முடித்துவிட்டீா்கள். இன்னும் 50 சதவீதம்தான் மீதம் இருக்கிறது. பாஜகவில் இருக்கக் கூடியவா்கள்கூட ‘திமுகவினா் போன்று யாராலும் வேலை செய்ய முடியாது’ என்று சொல்கிறாா்கள்.
கடந்த 1967-இல் முன்னாள் முதல்வா் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தபோது, பத்திரிகையாளா்களுக்கு பேட்டியளித்த அன்றைய முன்னாள் முதல்வா் பக்தவத்சலம், ‘திமுக-காரன் ஒரு சிங்கிள் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான். அதற்கு நாமெல்லாம் ஈடாக முடியாது’ என்று கூறினாா். அதே உணா்வோடு இன்றைக்கும் நான் திமுகவினரைப் பாா்க்கிறேன்.
தமிழகத்தில் உள்ள திமுக செயல்வீரா்கள் ஆற்றும் அந்தப் பணிகளையெல்லாம் பாா்க்கின்றபோது, முன்பு 200 தொகுதிகளுக்கு குறையாமல் திமுக கூட்டணி வெற்றி பெறுவோம் என்று நான் கூறியிருந்தேன். ஆனால் தற்போது 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது என்றாா் முதல்வா்.