தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக, காணும் பொங்கல் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருச்சியிலும் காணும் பொங்கலை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். திருச்சியின் முக்கிய சுற்றுலா தளமான முக்கொம்புவிற்கு மக்கள் இன்று காலை முதல் குவிந்தனர்.
அனைவரும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் முக்கொம்புவுக்கு வந்து காணும் பொங்கலை கொண்டாடினார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி முக்கொம்பு பூங்காவிலிருந்த ஊஞ்சல், ராட்டினம் உள்ளிட்டவற்றில் விளையாடினர். பெரியவர்களும் குழந்தைகளை போல் விளையாடி மகிழ்ந்தனர். அதே போல காவேரி ஆற்றிலும் குளித்து மகிழ்ந்தனர்.
திருச்சி மட்டுமல்லாது கரூர், தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் முக்கொம்புவிற்கு வருகை புரிந்து தங்கள் குடும்பத்தினருடன் உற்சாகத்துடன் பொங்கல் விழாவின் இறுதி நாளான காணும் பொங்கலை கொண்டாடினர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முக்கொம்பு சுற்றுலா தளத்திற்கு வருகை புரிந்ததன் காரணமாக அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொங்கலையும், மாட்டுப்பொங்கலையும் உற்சாகமாக கொண்டாடி விட்டு காணும் பொங்கலை கொண்டாட முக்கொம்புவிற்கு வருகை தந்துள்ளோம். உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து மிகவும் உற்சாகத்துடன் உள்ளோம் என முக்கொம்புவிற்கு வருகை தந்தவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.