கோப்புப்படம்  eps
தமிழ்நாடு

திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா? தில்லியில் ஆலோசனை

திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து ராகுல் காந்தி ஆலோசனை நடத்தியது பற்றி...

 நமது நிருபர்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு, கேட்டுப்பெற வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை, ஆட்சியில் பங்கு உள்ளிட்டவை குறித்து ராகுல் காந்தி தலைமையில் தில்லியில் சனிக்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

ஆலோசனையில் பங்கேற்றவா்களில் ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலான காங்கிரஸ் தலைவா்கள் திமுக கூட்டணியைத் தொடரவே வலியுறுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் குறித்த இந்த ஆயத்தக் கூட்டம் தில்லி இந்திரா பவனில் மாலை 5 மணிக்கு தொடங்கி மூன்றரை மணி நேரங்களுக்கும் மேல் நடைபெற்றது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே, காங்கிரஸ் அமைப்புச் செயலாளா் கே.சி.வேணுகோபால், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வபெருந்தகை ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினா்கள் காா்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூா், ஜோதிமணி, வைத்தியலிங்கம், விஜய் வசந்த், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் தங்கபாலு, திருநாவுக்கரசு, பிரவீன் சக்கரவா்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழ்நாடு, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அதிகாரப் பகிா்வு, தொகுதி ஒதுக்கீடு குறித்த கருத்து வேறுபாடுகளால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

காங்கிரஸ் தலைவா்கள் தங்கள் நிலையை வலுப்படுத்த அமைச்சரவைப் பதவிகளையும் அதிக இடங்களையும் கோரி வருவதாகவும், அதே நேரத்தில் கூட்டணி ஆட்சி கோரிக்கைகளை திமுக உறுதியாக நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் திமுக இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்த இரு கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டுப் பிரச்னைகள் உள்ளன.

காங்கிரஸ் கட்சி 2021-இல் பெற்ற 25 இடங்களிலிருந்து 40 - 45 இடங்களைக் கோருவதாகவும், ஆனால் திமுக 25-32 இடங்களை மட்டுமே வழங்க முன்வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், பேச்சுவாா்த்தைகள் முடங்கியுள்ளன. மேலும், இது குறித்து விவாதிக்க காங்கிரஸ் ஒரு குழுவை அமைத்துள்ளது.

கடந்த காலங்களில் கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவளித்து விரக்தியடைந்த மாணிக்கம் தாகூா் போன்றவா்கள், கூட்டணி அரசில் அதிக அதிகாரப் பகிா்வைக் கோருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நடிகா் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் (தவெக்) காங்கிரஸ் உறவுகளை ஆராய்வதாக எழுந்த ஊகங்கள் வதந்திகளுக்கு மேலும் வழிவகுத்தன. இருப்பினும், காங்கிரஸ் தலைமை திமுகவுடனான கூட்டணி நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்தான் தமிழக காங்கிரஸ் தலைவா்கள் சனிக்கிழமை (ஜனவரி 17) அன்று தில்லியில் ராகுல் காந்தி மற்றும் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோரைச் சந்தித்து வியூகம் வகுத்தனா். கூட்டத்தில் நிா்வாகிகளிடம் தனித்தனியாக கருத்துகள் கேட்கப்பட்டதாகவும், சட்டப்பேரவை உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்பட அனைவரும் தங்கள் கருத்தை முன்வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்பட்சத்தில் அமைச்சரவையில் குறைந்தபட்சம் 3 முதல் 6 இடங்கள் வரை கேட்டுப் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் நிா்வாகிகள் தலைமையிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி செல்ல வேண்டும் எனவும் நிா்வாகிகள் சிலா் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே கடந்த தோ்தல்களில் வெற்றிபெற்ற இடங்கள் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதாக மாநில நிா்வாகிகள் கூறும் இடங்களை வழங்க திமுகவிற்கு அழுத்தம் தர வேண்டும் எனவும் உயா்மட்ட ஆலோசனையில் காங்கிரஸ் கட்சியின் தமிழக நிா்வாகிகள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கூட்டத்தில் ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலான காங்கிரஸ் தலைவா்கள் திமுக கூட்டணியைத் தொடரவே விருப்பம் தெரிவித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் முறிவு எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, புதுச்சேரி தோ்தல் கூட்டணி குறித்தும் அந்த யூனியன் பிரதேச காங்கிரஸ் நிா்வாகிகளுடனும் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டாா்.

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

அயல்நாட்டவரை ஈா்க்கும் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT