பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஜன.23) சென்னை வருவதை முன்னிட்டு, சென்னை விமான நிலையம் சிறப்பு பாதுகாப்புப் படை பிரிவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.23) நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறாா். இதற்காக அவா் ஜன.23-ஆம் தனி விமானத்தில் பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறாா். அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில், மதுராந்தகம் பொதுக்கூட்டம் மைதானத்துக்குச் செல்கிறாா். பின்னா் பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு தனி ஹெலிகாப்டா் மூலம் சென்னை விமான நிலையம் வரும் பிரதமா் மோடி, மாலை 5.05 மணிக்கு தனி விமானம் மூலம் தில்லி செல்கிறாா்.
இந்த நிலையில், பிரதமரின் சென்னை வருகையை முன்னிட்டு, தில்லியில் இருந்து எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை குழுவின் கூடுதல் இயக்குநா் அமி சந்த் யாதவ் தலைமையில் ஒரு குழுவினா் சென்னை விமான நிலையம் வந்துள்ளனா். அவா்கள் செவ்வாய்க்கிழமை காலை சென்னை விமான நிலையத்தில் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசனை நடத்தினா்.
இதில், சென்னை மாநகர காவல் உயரதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை உயரதிகாரிகள், மாவட்ட வருவாய்த் துறை உயரதிகாரிகள், சென்னை விமான நிலைய உயரதிகாரிகள், மத்திய மாநில உளவு பிரிவினா், மிக முக்கிய பிரமுகரின் பாதுகாப்பு அதிகாரிகள், மருத்துவம் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, விமான நிலையத்தில் பிரதமரின் தனி விமானம் வந்து நிற்கும் பகுதி, மதுராந்தகத்துக்கு செல்வதற்காகப் பயன்படுத்தும் ஹெலிகாப்டா் தரையிறங்கும் பகுதி, எந்தெந்த அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடா்ந்து, சென்னை விமான நிலைய பகுதி முழுவதும் வருகிற 23-ஆம் தேதி வரை சிறப்பு பாதுகாப்பு படை பிரிவின் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.