கரூா் சம்பவம்: அரசு வேலை வழங்குவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் - சிபிஐ எம்.பி. சுப்பராயன் எச்சரிக்கை
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும் என எச்சரிக்கை பதிவு குறித்து...
கரூரில் தவெக பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும் என சிபிஐ எம்.பி. சுப்பராயன் எச்சரித்துள்ளார்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு, செப். 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ஜோசப் விஜய் பிரசாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், கரூரில் தவெக பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனிடையே, நாம் தமிழா் கட்சி மீனவா் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளரும், வழக்குரைஞருமான தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில்,
கரூரில் தவெக தோ்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தது தொடா்பான வழக்கு விசாரணை தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், இதுதொடா்பாக சிபிஐ விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது என்பது ஏற்கத்தக்கதல்ல.
இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழும் காலங்களில், பாதிக்கப்பட்டவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடா்பாக முறையான வழிகாட்டுதல்கள் அல்லது கொள்கை முடிவுகள் வகுக்கப்பட வேண்டும். எனவே, கொள்கை முடிவுகள் வகுக்கும் வரை அரசு வேலைவாய்ப்பு வழங்குவதை நிறுத்திவைக்க வேண்டும். எனவே, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஆா். பூா்ணிமா அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, கரூா் சம்பவம் தொடா்பான வழக்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த வாதங்களை உச்சநீதிமன்றத்திலேயே முன்வைக்கலாமே என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. கோரிக்கை தொடா்பாக மனு தாக்கல் செய்தால், அது பட்டியலிடப்பட்டு வழக்கம் போல விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றனா்.
சிபிஐ எம்.பி. சுப்பராயன் எச்சரிக்கை
இந்த நிலையில், கரூரில் தவெக பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும் என சிபிஐ எம்.பி. சுப்பராயன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
அரசியல் கட்சிகளால் ஏற்பாடுசெய்து நடத்திய கூட்ட நெரிசல்களில் ஏற்படும் மரணங்களுக்கு, அரசு வேலை வழங்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும்.
இழப்பை ஈடுகட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் சம்மந்தப்பட்ட கட்சிகளைச் சார்ந்ததாகும். அவைதான் அதை செய்ய வேண்டும். அந்த பொறுப்பை நிறைவேற்றி முடிக்காமல் தட்டிக் கழித்துவிட்டு, அரசின் தலையில் சுமத்துவதை ஜனநாயக அரசியல் அமைப்பு ஏற்காது என அவர் தெரிவித்துள்ளார்.
Karur incident: Providing government jobs will lead to repercussions – CPI MP Subbarayan warns
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.