முகப்பு
தமிழ்நாடு

குட்டி... கோயில் யானைக் கதை சொன்ன தவெக தலைவர் விஜய்!

தவெக சார்பில் நடைபெற்ற மகளிர் நாள் விழாவில் கோயில் யானை பற்றி குட்டிக் கதை சொன்ன விஜய்

Updated On : 7 மார்ச், 2026 at 6:03 PM
தவெக தலைவர் விஜய் - File photo
பகிர்:

மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற தவெகவின் மகளிர் தின கொண்டாட்டத்தின்போது, தொண்டர்கள் முன்பு பேசிய கட்சித் தலைவர் விஜய், கோயில் யானை பற்றி குட்டிக் கதை ஒன்றைச் சொல்லி தன்னுடைய பேச்சைத் தொடங்கினார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கட்சித் தலைவர் விஜய் தலைமையில் மகளிர் நாள் விழா, இன்று மாலை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

விழாவில் குட்டிக் கதை சொன்ன விஜய், ஒரு ஊரில் கோயில் யானை ஒன்று இருந்தது. அது ரொம்ப உஷாரான யானையாம். ஆனால், அந்த ஊரில் இருந்த ஒரு ஜெகஜால கில்லாடி, அந்த யானையை ஏமாற்றிவிட்டார். எப்படி ஏமாற்றினார் என்றால், தேங்காயை உடைத்து அதிலிருந்து தேங்காயை எடுத்துவிட்டு, சுண்ணாம்பு வைத்து, தேங்காய் போல ஆக்கி அதனை யானையிடம் கொடுத்தார். யானையும் அதை வாங்கி சாப்பிட்டுவிட்டது. எப்படி ஏமாற்றினீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, அது தொழில் ரகசியம் ஐய்யாச்சாமி, அதற்கெல்லாம் அனுபவம் வேண்டும், உன்னால் முடியாது என்று என்று கூறினாராம் அந்த ஜெகஜால கில்லாடி.

Advertisement

இந்த சம்பவத்துக்குப் பிறகு மீண்டும்ஜெகஜால கில்லாடியும் அவரது நண்பரும் சந்தித்தனர். பாவம் அந்த யானை அன்று ஏமாந்துவிட்டது என்று நண்பர் சொல்ல, ஜெகஜால கில்லாடியோ, எனது திறமை மீது நம்பிக்கை இல்லையா என்று கேட்டுவிட்டு, மீண்டும் அதே யானையிடம் சென்று வாழைப்பழத்தை எடுத்துவிட்டு பஞ்சை வைத்து யானையிடம் நீட்டியிருக்கிறார்.

யானையும் அந்த பழத்தை வாங்குவது போல வந்து, ஜெகஜால கில்லாடியை தும்பிக்கையால் தூக்கிப் போட்டுவிட்டது.

அப்போது கீழே விழுந்திருந்தவரிடம் அவரது நண்பர் சொன்னாராம், அந்த யானைக்கு ஞாபக சக்தி அதிகம் என்று நினைக்கிறேன் என சொல்லியிருக்கிறார்.

இந்தக் கதையில் யானை என்பது யார் என்றால் வாக்காளர்கள். அந்த ஜெகஜாலம்ஸ் யார் என்று கேட்டால், உங்கள் மனதில் யாரையாவது நினைத்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்று கூறி கதையை நிறைவு செய்த விஜய், இங்கே இருப்பது ஒற்றை யானையல்ல, இரட்டை யானைகள், என் சிங்கப் பெண்கள், உங்களை யாரும் ஏமாற்ற முடியாது என்று கூறினார்.

இந்த மகளிர் நாள் விழாவில், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்தும் கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

summary

Vijay told a short story about a temple elephant at the Women's Day event organized by TVK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.