FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆடு, புலி, புல்லுக்கட்டு சவால்...

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பது பற்றி...

மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய் - கோப்புப்படம்
பகிர்:

நமது சிறப்பு நிருபர்

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரையில் இல்லாத குழப்பம் உருவாகி இருக்கிறது. இதற்கு முன்னர், முதலாவது சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை இல்லாமல் இருந்தபோதுகூட இதுபோன்ற திரிசங்கு நிலைமை ஏற்படவில்லை.

1952-இல் கவர்னர் ஜெனரலாக இருந்து பணி ஓய்வு பெற்று திருக்குற்றாலத்தில் தனது நண்பர் "ரசிகமணி' டி.கே.சிதம்பரநாத முதலியார் வீட்டில் தங்கியிருந்த ராஜாஜியை அழைத்து வந்து முதல்வராக்கித் தனது பெரும்பான்மையை காங்கிரஸ் நிரூபிக்க முடிந்தது.

Advertisement

Advertisement

1987-இல் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோதுகூட, வி.என்.ஜானகி தலைமையில் அமைச்சரவை அமைந்து, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஆட்சி கவிழ்ந்து ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸும், திமுகவும் ஜானகி ஆட்சிக்கு எதிராக வாக்களித்ததால் பெரும்பான்மை பெற முடியவில்லை.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நடந்து முடிந்த தேர்தலில் களமிறங்கி முதல் தேர்தலிலேயே 34.92% வாக்குகள் பெற்றுப் பரவலான ஆதரவைப் பெற்றாலும்கூட, முன்பு 1967-இல் அண்ணாதுரை தலைமையில் திமுக, 1977-இல் எம்.ஜி.ஆர். தலைமையில் அதிமுக போலத் தனிப்பெரும்பான்மை பெறும் அளவிலான வெற்றியைப் பெற முடியவில்லை. எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் தமிழ்நாடு முதல்முறையாக தொங்கு சட்டப்பேரவையைச் சந்தித்து இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக தவெக உயர்ந்தாலும்கூட, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது. சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், திமுக அல்லது அதிமுக கூட்டணிக் கட்சிகளை எதிர்பார்த்துதான் ஆட்சி அமைப்பது குறித்து தவெக தலைவர் விஜய் சிந்திக்க முடியும்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் (5), இடதுசாரிகள் (4), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2), தேமுதிக (1) ஆகியவற்றில் காங்கிரஸ் மட்டும்தான் தன்னிச்சையாக முன்வந்து தவெகவுக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கிறது. ஏனைய கூட்டணிக் கட்சிகள், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் திமுக தலைமையைப் பகைத்துக் கொள்ளவோ, கூட்டணியை முறித்துக் கொள்ளவோ தயக்கம் காட்டுகின்றன.

தேர்தலுக்கு முன்பே காங்கிரஸில் ஒரு பிரிவினர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் மறைமுக ஆதரவுடன், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தவெக அதிகபட்சமாக 100 இடங்கள் ஒதுக்கித் தர முன்வந்ததாகவும், அந்த முயற்சியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் ஆதரவுடன் முறியடித்ததாகவும் கூறப்படுகிறது.

கடுமையான பேரத்துக்குப் பிறகு 28 இடங்களை திமுகவிடம் இருந்து பெற்றாலும் வெறும் 5 இடங்களில் மட்டும்தான் காங்கிரஸôல் வெற்றி பெற முடிந்தது. ஆனால், அந்த ஐந்து இடங்களுடன் தவெகவுக்கு ஆதரவு வழங்கி, கூட்டணி ஆட்சியிலும் இடம் பெறலாம் என்று கணக்குப் போடுகிறது காங்கிரஸ். இப்போது தவெகவுக்கு ஆதரவு வழங்குவதுடன், அதன் கூட்டணியிலும் இணைவதால் 2029 மக்களவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் பெற்று, அதிக இடங்களில் வெற்றி பெற முடியும் என்பது காங்கிரஸின் கணக்கு.

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆரம்பம் முதலே தவெக தலைவர் விஜய் தயக்கம் காட்டி வந்தார். ஆட்சி அமைந்துவிட்டால், அதிமுக பிளவுபட்டு தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அவருக்கு நெருக்கமானவர்கள் ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது. மேலும், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, தனக்கு ஆதரவு தருவதற்கு தயக்கம் காட்டும் என்றும் அவர் கருதியிருக்கக்கூடும்.

அதிமுக கூட்டணியில் உள்ள பாமக (4), அமமுக (1) ஆகிய இரண்டு கூட்டணிக் கட்சிகளும் தனக்கு ஆதரவு அளிக்க முன்வராது என்று முன்கூட்டியே தவெக தலைவர் விஜய் முடிவு செய்திருந்தார் என்றும் சொல்கிறார்கள். அதனால் திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தேமுதிக ஆகியவற்றை இணைத்துக்கொண்டு அறுதிப் பெரும்பான்மை பெற்றுவிடலாம் என்று தவெக தரப்பு திட்டமிட்டிருந்தது.

முறையாக அழைப்பு விடுக்கப்படாததால் இடதுசாரிகளும், கூட்டணி தர்மத்தை மீற விரும்பாததால் விசிக, தேமுதிகவும் காங்கிரûஸப்போல உடனடியாகத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இன்னொரு தயக்கமும் இருப்பதாகத் தெரிகிறது.

தேர்தல் முடிவுகளை அலசும்போது, விசிகவின் அடிப்படை வாக்கு வங்கியான ஆதிதிராவிடர்களின் வாக்குகள் கணிசமாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. தவெகவின் பரவலான வெற்றிக்கு முதல்முறை வாக்காளர்கள், கிறிஸ்தவர்களின் பங்கு மட்டுமல்லாமல் கணிசமான ஆதிதிராவிடர் வாக்குகளும் காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

தவெக கூட்டணியில் இணைந்தால், மிச்சம் மீதி இருக்கும் ஆதிதிராவிடர் வாக்கு வங்கியும், அந்தக் கட்சியை நோக்கி நகர்ந்துவிடக்கூடும் என்கிற நியாயமான அச்சம்தான் விடுதலைச் சிறுத்தைகளின் தயக்கத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும். ஆட்சியில் பங்கு என்கிற ஒரே காரணத்துக்காக மட்டும்தான் விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து யோசிக்கும்.

தவெகவுக்கு ஆதரவோ, விஜய்யை முதல்வராக ஏற்றுக்கொண்டு அந்தக் கட்சியுடன் கூட்டணியோ வைப்பதில்லை என்பதில் திமுகவும் அதிமுகவும் உறுதியாக இருக்கின்றன என்பதுதான் நம்பகமான தகவல். தேவை ஏற்பட்டால் தவெக ஆட்சி அமைப்பதைத் தடுப்பதற்கு, அதிமுகவுக்கு மறைமுக ஆதரவு வழங்கும் அளவுக்குக்கூட திமுக தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

"உடனடியாக இன்னொரு தேர்தலைச் சந்திக்க யாருமே தயாராக இல்லை. தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், யாரும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவினால் சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு மறு தேர்தலுக்கு வழிகோல வேண்டும். அது தவெகவுக்கு அனுதாப வாக்குகளை உருவாக்கித் தனிப்பெரும்பான்மை பெற வழிகோலும். அதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்'' என்பதுதான் திமுக, அதிமுக தரப்பினரிடமிருந்து கிடைக்கும் தகவல்.

ஆட்சி அமைக்க உரிமைகோரி தவெக தலைவர் விஜய் ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகருக்குக் கடிதம் அனுப்பி, அவரது அழைப்பின்பேரில் சந்தித்துவிட்டார். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை உறுதிப்படுத்தும் விதத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரும்படி ஆளுநர் அவரிடம் தெளிவுபடுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆளுநர் மாளிகை உறுதிப்படுத்தாத நிலையிலும், அதிகாரிகள் பதவி ஏற்புக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய முற்பட்டிருப்பது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதுகுறித்து தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், காவல் துறைத் தலைவர் உள்ளிட்டவர்களிடம் தனது அதிருப்தியை ஆளுநர் தெரிவித்ததாக அரசு வட்டாரங்களில் பேசப்படுகிறது.

உறுதிப்படுத்தப்படாத ஆதரவின் அடிப்படையில் விஜய் முதல்வராகப் பதவி ஏற்பதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்போவதில்லை என்பதுதான் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவல்.

"தமிழ்நாட்டில் இதுவரையில் குதிரை பேரம் நடந்ததில்லை. போதிய ஆதரவில்லாமல் பதவி ஏற்பை நடத்திவிட்டு, தவெக தலைவர் விஜய்யால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலைமை ஏற்படுவதில் அர்த்தமில்லை. ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கினால், அந்த இடைவெளியில் கட்சிகளை உடைக்கவும், எம்எல்ஏக்களை விலை பேசவும், சிலரை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்க்கச் சொல்லவும் வாய்ப்பு உண்டு. அதற்கு ஆளுநர் இடமளிக்க விரும்பவில்லை'' என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

யார் கண்டது? திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைத்தாலும் ஆச்சரியமில்லை. அந்த ஆட்சியில் திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இணைந்தால், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம்.

குதிரை பேரம் நடத்தப்பட்டு, நிலையில்லாத ஆட்சி அமைவதைவிட அது மேல் என்று ஆளுநர் கருதுவதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது!

ஆளுநர் என்ன செய்யலாம்?

எந்தவொரு கட்சிக்கோ, கூட்டணிக்கோ தனிப்பெரும்பான்மை இருந்தால் அரசியல் சாசனப் பிரிவு 164(1)-இன் கீழ் ஆளுநர் அதன் தலைவரை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்து, அவரது ஆலோசனைப்படி அமைச்சரவை சகாக்களையும் நியமிக்க வேண்டும். எந்தவொரு கட்சிக்கோ, கூட்டணிக்கோ பெரும்பான்மை இல்லாத நிலையில் மட்டுமே ஆளுநர் சுயமாக முடிவெடுக்கலாம்.

அவையில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று ஆளுநர் கருதினால், கட்சியின் அல்லது கூட்டணியின் தலைவரைப் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் முதல்வராக நியமிக்கலாம். அவர்கள் குறிப்பிட்ட காலவரையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்க ஆளுநருக்கு உரிமை உண்டு.

யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், மரபுகள், முன்னுதாரணங்கள், சர்க்காரியா கமிஷன் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் அதிக எண்ணிக்கை பலமுள்ள கட்சி அல்லது கூட்டணிக்குத் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும். ஆனால், அது குதிரை பேரத்துக்கும், கட்சிப் பிளவுகளுக்கும் வழிகோலுமானால் அதைத் தவிர்க்கும் உரிமை ஆளுநருக்கு உண்டு.

ஆளுநரின் அடிப்படைக் கடமை நிலையான ஆட்சி அமைக்கப்படுவதுதான். அதற்கேற்ப முடிவுகள் எடுக்கும் உரிமையை அரசியல் சாசனம் ஆளுநருக்கு வழங்குகிறது. சட்டப்பேரவை உறுப்பினர் அல்லாத, எந்தக் கட்சியையும் சாராத ஒருவரால் நிலையான ஆட்சியை வழங்க முடியும் என்று ஆளுநர் கருதினால் அவரை முதல்வராக நியமித்து, குறிப்பிட்ட கால அளவில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்கும் உரிமையும் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

summary

How TVK form Government? What can the Governor do?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments