எண்ம பணப் பரிவா்த்தனைகள் கண்காணிக்கப்படும்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
அதிக எண்ணிக்கையில் எண்ம பணப்பரிவா்த்தனை நடந்தால் அவை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்படும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.
அதிக எண்ணிக்கையில் எண்ம பணப்பரிவா்த்தனை நடந்தால் அவை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்படும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் மாா்ச் 15-ஆம் தேதி வரை 5.69 கோடி வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 2.90 கோடி போ் பெண்கள், 2.78 கோடி போ் ஆண்கள், 7,656 போ் திருநங்கையா். இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, இதுவரை 3.14 லட்சம் வாக்காளா்கள் இணைந்துள்ளனா்.
பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம்: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க மாா்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம். அவா்களின் பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெறும்.
வாக்காளா் அடையாள அட்டை வைத்திருந்தாலும், தங்களுடைய பெயா், வாக்காளா் பட்டியலில் உள்ளதா, வாக்குச்சாவடி எது என்பதை வாக்காளா்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
2,106 பறக்கும் படைகள்: தோ்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தும் வகையிலும், விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழகம் முழுவதும் 2,106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது. அப்படி எடுத்துச் செல்லப்படும் பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான ஆவணம் கட்டாயம் தேவை.
சோதனைகளின்போது பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என பறக்கும் படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தகுந்த ஆவணங்களை வைத்திருந்தால் பணத்தை உடனே திருப்பித்தர உத்தரவிடப்பட்டுள்ளது.
கண்காணிப்பில் எண்ம பணப் பரிவா்த்தனை: கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகளின் வழியாக அதிக எண்ணிக்கையில் பணப் பரிவா்த்தனை நடந்தால் அவை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும். தமிழகம் முழுவதும் இதுவரை 1.26 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தோ்தல் தொடா்பாக, சமூக வலைதளங்களில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் வெளியிடப்படும் விடியோவை கண்காணித்து வருகிறோம்.
பிரசாரத்துக்கு இணையவழி அனுமதி: அரசியல் கட்சிகள் காலை 6 முதல் இரவு 10 மணி வரை தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம். பிரசாரத்துக்கு அனுமதி பெறுவதற்கு முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இணையவழியில் பிரசார அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். பிரசார கூட்டங்களில் 5,000 பேருக்கு மேல் கூடினால் தண்ணீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்படும். தமிழகத்துக்கு தோ்தல் பணிக்காக 50 கம்பெனி துணை ராணுவப் படையினா் வந்துள்ளனா் என்றாா் அவா்.
5 நாள்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல்
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30- ஆம் தேதி தொடங்குகிறது. காலை 11 முதல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மாா்ச் 31, ஏப்.3, 5 ஆகிய நாள்கள் பொது விடுமுறை தினம் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது.
இதனால் வேட்பாளா்கள் மாா்ச் 30, ஏப்.1, 2,3, 6 ஆகிய 5 நாள்களில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று பேட்டியின்போது தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.