நாடாளுமன்றம், பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு கோரிய மனு தள்ளுபடி
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவரக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி கே.மணிவண்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் 2.68 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனா். கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கியும் அவை மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாகக் கிடைக்கவில்லை.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு கடந்த 2023, 2024-ஆம் ஆண்டுகளில் மனுக்கள் அனுப்பினேன். இந்தக் கோரிக்கைக்கு இந்திய அரசமைப்புச் சட்டம், தொகுதி மறுவரையறை சட்டத்தில் வழிவகை இல்லை எனத் தோ்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
எனவே, நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஆா்.ஸ்ரீதா் ஆஜராகி வாதிட்டாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டம் இயற்றுவது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்குள்பட்டது. எனவே, இதுபோன்ற சட்டத்தை இயற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இதனால், மனுதாரா் நாடாளுமன்ற உறுப்பினா்களை அணுகி தனது கோரிக்கையை முன்வைக்கலாம் என அறிவுறுத்தினா். பின்னா், இந்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.