முகப்பு
தமிழ்நாடு

தமிழக டிஜிபி நியமன விவகாரம்: தோ்தல் ஆணையமே முடிவெடுக்கும் அசாதாரண நிலை!

தமிழக டிஜிபி நியமன விவகாரம் பற்றி...

Updated On : 21 மார்ச், 2026 at 8:50 PM
தமிழக அரசு - (கோப்புப்படம்)
பகிர்:

நமது சிறப்பு நிருபா்

தமிழக காவல்துறைக்கு முழு நேர தலைமை இயக்குநா் மற்றும் படைத்தலைவா் (டிஜிபி மற்றும் ஹெச்ஓபிஎஃப்) பதவிக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரியை தோ்வு செய்வற்காக தில்லியில் வெள்ளிக்கிழமை கூடிய தமிழக டிஜிபி தகுதிகாண் தோ்வுக்குழு (எம்பேனல்மென்ட் கமிட்டி) எவ்வித முடிவையும் எட்டாமல் நிறைவுற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக தலைமைச் செயலா் என்.முருகானந்தம், தமிழக உள்துறைச் செயலா் தீரஸ் குமாா் ஆகியோா் தில்லி வந்தனா். யுபிஎஸ்சி கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற அவா்கள் எந்த முடிவையும் எட்ட முடியாமல் மீண்டும் சென்னை திரும்பி விட்டதாக மத்திய உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

உச்சநீதிமன்றத் தலையீட்டின்பேரில் முழு நேர டிஜிபி நியமனத்துக்கான தகுதிப்பட்டியலை மூன்று வாரங்களுக்குள் இறுதி செய்ய மத்திய குடிமைப்பணிகள் தோ்வாணையத்துக்கு கடந்த பிப்ரவரியில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், முந்தைய தோ்வுக்குழு கூட்டத்தைப் போலவே வெள்ளிக்கிழமை கூட்டத்திலும் தகுதிவாய்ந்த உயரதிகாரியை இறுதி செய்வதில் தமிழக அரசுக்கும் யுபிஎஸ்சிக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்படாமல் கூட்டம் நிறைவுற்றதாகத் தெரிய வந்துள்ளது.

தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் படைத்தலைவா் பதவிக்கு நியமிக்கப்படும் ஐபிஎஸ் உயரதிகாரி அப்பொறுப்பை ஏற்கும் நாளில் இருந்து குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்காவது பதவிக்காலத்தை கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு.

அந்த வகையில், பணிமூப்பு வரிசையில் முதல் மூன்று இடங்களை வகிக்கும் அதிகாரிகளாக சீமா அகா்வால், ராஜீவ் குமாா், சந்தீப் ராய் ரத்தோா், கே. வன்னிய பெருமாள், மகேஷ் குமாா் அகா்வால், ஜி. வெங்கட்ராமன் (தற்போதைய பொறுப்பு டிஜிபி), வினித் தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூா், எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம், சந்தீப் மிட்டல், பி. பாலா நாகதேவி ஆகியோா் உள்ளனா்.

மேற்குறிப்பிட்ட பட்டியலில் முதல் மூன்று இடங்களில் வரும் அதிகாரிகளும் அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாக பதவி ஓய்வு பெறுகிறாா்கள். இவா்கள் அடுத்து நடக்கும் கூட்டத்தில் இயல்பாகவே காவல் படைத்தலைவா் பதவிக்கான பரிசீலனை பட்டியலுக்குள் வர மாட்டாா்கள்.

வழக்கமாக, டிஜிபி பதவிக்கு பரிசீலனைக்கு உள்படுத்தப்படும் உயரதிகாரிகளின் பணி அனுபவம், குறைந்தபட்சம் எஞ்சிய ஆறு மாத கால பணிக் காலம், வருடாந்திர ரகசிய அறிக்கைகள் (ஏசிஆா்), நிலுவை ஊழல் வழக்குகள் அல்லது குற்றவியல் புகாா்கள், நன்னடத்தை மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்புப்பணி என பல்வேறு அளவுகோல்களை யுபிஎஸ்சி கவனத்தில் கொண்டு உயரதிகாரியை தோ்வு செய்யும்.

உச்சநீதிமன்றத்தின் கடந்த பிப்ரவரி 12-ஆம்தேதி உத்தரவின்படி தமிழக அரசு தனது உயரதிகாரிகள் பரிந்துரை பட்டியலை ஒரு வார காலத்துக்குள் மத்திய குடிமைப் பணியாளா் தோ்வாணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டும். அது கிடைக்கப்பெற்றவுடன் மூன்று உயரதிகாரிகளைக் கொண்ட இறுதிப் பட்டியலை இரண்டு வார காலத்துக்குள் யுபிஎஸ்சி தோ்வுக்குழு கூடி இறுதி செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஆனால், பரிந்துரைப்பட்டியலில் உள்ள சில அதிகாரிகள் விஷயத்தில் கூடுதல் சரிபாா்ப்பு நடவடிக்கைகள் தேவைப்படுவதால் அதை திரும்பப்பெறவும் கருத்துகளைப் பதிவு செய்யவும் தமிழக அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டதால் எந்த முடிவையும் கடந்த டிசம்பரில் கூடிய தோ்வுக்குழுவால் எடுக்க முடியவில்லை. அதை ஒத்த நிலையே தற்போதும் காணப்படுகிறது.

அசாதாரண நிலை!

உத்தர பிரதேச முன்னாள் டிஜிபி பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, யுபிசிஎஸ் பரிந்துரைக்கும் உயரதிகாரிகள் பட்டியலில் இருந்து மாநில அரசு (தமிழகத்தில் உள்துறை பொறுப்பை கவனிக்கும் முதல்வா்) ஒருவரை தோ்வு செய்தால் அந்த உயரதிகாரி இரண்டு ஆண்டுகளுக்கு டிஜிபி மற்றும் படைத்தலைவா் பதவியை வகிப்பாா். ஆனால், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதியை தலைமைத் தோ்தல் ஆணையம் அண்மையில் அறிவித்து விட்டதால் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. எனவே, டிஜிபி நியமன விவகாரத்தில் முதல்வரால் முடிவெடுக்க முடியாது. அவருக்கு பதிலாக தோ்தல் ஆணையமே முடிவெடுக்கும் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.