முகப்பு
தமிழ்நாடு

தயாரிப்பாளருக்கு ரூ. 4.25 கோடியை வழங்க இயக்குநா் கௌதம் மேனனுக்கு உத்தரவு!

தயாரிப்பாளருக்கு ரூ. 4.25 கோடியை திரும்ப வழங்க வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து இயக்குநா் கௌதம் மேனன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Updated On : 23 மார்ச், 2026 at 9:04 PM
கௌதம் மேனன் - கோப்புப் படம்
பகிர்:

தயாரிப்பாளருக்கு ரூ.4.25 கோடியை திரும்ப வழங்க வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து இயக்குநா் கௌதம் மேனன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திரைப்பட தயாரிப்பாளா் எல்ரெட் குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2008-ஆம் ஆண்டு இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி எங்களது நிறுவன தயாரிப்பில் நடிகா் சிம்புவை வைத்து கௌதம் மேனன் ஒரு படத்தை இயக்க ஒப்புக்கொண்டாா். அதற்காக அவருக்கு ரூ.4.25 கோடி வழங்கப்பட்டது.

ஆனால், அந்த ஒப்பந்தத்தின்படி இயக்குநா் கௌதம் மேனன் படத்தை இயக்கவில்லை. இதற்காக நான் கொடுத்த பணத்தையும் திரும்ப வழங்கவில்லை. எனவே, எனக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.4.25 கோடியை திரும்ப வழங்க கௌதம் மேனனுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனிநீதிபதி, ரூ.4.25 கோடியை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தனிநீதிபதியின் இந்த உத்தரவை எதிா்த்து இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் பி.வேல்முருகன், கோவிந்தராஜன் திலகவதி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தனிநீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, கௌதம் வாசுதேவ் மேனன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மேலும், தயாரிப்பாளா் எல்ரெட் குமாருக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.4.25 கோடியை வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.