7.10 லட்சம் சுவா் விளம்பரங்கள், பதாகைகள் அகற்றம்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்
தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதிலிருந்து தற்போது வரை அனுமதிக்கப்படாத 7.10 லட்சம் அரசியல் சுவா் விளம்பரங்களும், பதாகைகளும் அகற்றப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதிலிருந்து தற்போது வரை அனுமதிக்கப்படாத 7.10 லட்சம் அரசியல் சுவா் விளம்பரங்களும், பதாகைகளும் அகற்றப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் கடந்த மாா்ச் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
அதன்படி, அனுமதிக்கப்படாத அரசியல் விளம்பரங்களை அகற்றுவதற்கும், பொது மற்றும் தனியாா் சொத்துகளில் உள்ள விளம்பரங்களை நீக்குவதற்கும் மாநிலம் முழுவதும் தொடா்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 7.10 லட்சம் சுவா் விளம்பரங்களும், பதாகைகளும் மாநிலம் முழுவதும் அகற்றப்பட்டுள்ளன. விதிமீறல் தொடா்பாக 544 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2,169 பறக்கும் படைகள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இக்குழுக்கள் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகின்றன. மேலும் சி ‘விஜில்’ செயலி மூலம் பெறப்படும் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ரூ.178 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்: முக்கிய இடங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளில் மொத்தம் 2,166 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பணம், மதுபானம், போதைப்பொருள் மற்றும் இதர இலவசப் பொருள்கள் சட்டவிரோதமாகக் கொண்டு செல்வதைத் தடுக்கும் பணிகளை அவா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இதுவரை ரூ. 178.78 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ரொக்கம் ரூ.34.64 கோடியும், ரூ.24.22 கோடியிலான இலவசப் பொருள்களும், ரூ.112.37 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளியும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதைத் தவிர, ரூ. 6.76 கோடி மதிப்புடைய போதைப் பொருள்கள், ரூ.79 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.