உ.பி.: திருமண விழாவில் உணவு நஞ்சானதால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
உத்தரப் பிரதேசத்தில் திருமண விழாவில் உணவு நஞ்சானதால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் திருமண விழாவில் உணவு நஞ்சானதால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், கிஜ்னா கிராமத்தைச் சேர்ந்த முகமது நசிமின் திருமண விழா, லாலாபூர் என்ற இடத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அப்போது அசைவ உணவுகளை உட்கொண்ட சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், திருமண விழாவில் பரிமாறப்பட்ட பல்வேறு அசைவ உணவுகளைச் சாப்பிட்ட அரை மணி நேரத்திலேயே, விருந்தினர்களுக்குக் கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. கிராம மக்களிடமிருந்து தகவல் கிடைத்தவுடன் ஆம்புலன்ஸ் விரைந்து அனுப்பப்பட்டது.
பாதிக்கப்பட்ட அனைவரும் முதலில் தேவா பகுதியில் உள்ள சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பலருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஆறு பேர் மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு குறிப்பிட்டனர். பரிசோதனைக்காக உணவு மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.
"பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிலைமை சீரானதையடுத்து சிலர் வீடு திரும்பியுள்ளனர். உணவு நஞ்சானதற்கான சரியான காரணத்தைக் கண்டறிய சுகாதாரத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது" என்று மருத்துவர் அவதேஷ் யாதவ் தெரிவித்தார்.