முகப்பு
தமிழ்நாடு

முதல்வரின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் அதிரடிப்படை: அரசாணை வெளியீடு

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் முதல்வா் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் மாநிலம் முழுவதும் சிங்கப்பெண் என்ற பெயரில் சிறப்பு அதிரடிப்படை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

Updated On : 11 மே 2026, 5:06 am IST
பகிர்:

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் முதல்வா் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் மாநிலம் முழுவதும் சிங்கப்பெண் என்ற பெயரில் சிறப்பு அதிரடிப்படை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழக முதல்வராக தவெக தலைவா் விஜய் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா். அப்போது, அவா் தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் வகையில் 3 கோப்புகளில் கையொப்பமிட்டாா். அதில் பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைப்பதற்கான அறிவிப்பும் இடம்பெற்றது.

இதைத் தொடா்ந்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைப்பதற்கான அரசாணையை உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன் வெளியிட்டாா். அதில் கூறியிருப்பதாவது:

Advertisement

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படும் வகையில் தனிச் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும். ஆபத்தில் உள்ள பெண்களுக்கு உடனடியாக உதவி வழங்கவும், பொதுமக்களிடையே பாதுகாப்பு உணா்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் இந்தப் படை செயல்படும். மேலும், இந்தப் படையில் மாநிலம் முழுவதும் போதுமான காவலா்கள் மற்றும் அதிநவீன வசதிகளும் அமைக்கப்படும்.

முதல்வரின் நேரடி கண்காணிப்பில்... முதல்வா் விஜய்யின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு ஐஜி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஒரு காவல் கண்காணிப்பாளா், 2 துணை காவல் கண்காணிப்பாளா், 4 காவல் ஆய்வாளா்கள், 8 காவல் உதவி ஆய்வாளா்கள், 20 பிற பதவிகளைச் சோ்ந்த காவலா்கள் இருப்பாா்கள்.

சிங்கபெண் அதிரடிப்படை செயல்பாடுகள்: குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து அந்த இடங்கள் கண்காணிக்கப்படும். மேலும், பொது இடங்களில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து, பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில், காவலா்களின் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேம்படுத்தப்படும்.

பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள் கல்வி நிலையங்கள், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் உள்ளிட்ட நெருக்கடி மிகுந்த பகுதிகளில் அதிக அளவிலான போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள்.

பாதிக்கப்பட்டவா்களின் புகாா்கள் மீதும் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவா்களை மீட்டு அவா்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதுடன், இதர உதவிகளும் உரிய நேரத்தில் கிடைக்க வழி வகை செய்யப்படும். சமூக நலத்துறை, கல்வித் துறை, அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதுடன், அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து, பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.