முதல்வர் விஜய்யின் நாற்காலியும் வெள்ளைத் துண்டும்!
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் நாற்காலியில் இருந்து வெள்ளைத் துண்டு நீக்கப்பட்டது பற்றி...
தலைமைச் செயலகத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் அமரும் நாற்காலியின் சாய்விடத்தில் போர்த்தப்பட்டிருந்த வெள்ளைத் துண்டு நீக்கப்பட்டிருப்பது இணையவெளியில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
முதல்வராக விஜய் பொறுப்பேற்றது முதல் அவரின் செயல்பாடுகள் பலவும் இணையத்தில் பெரும் கவனம் பெற்று வருகின்றன.
முதல்வர் விஜய் பதவியேற்றுத் தலைமைச் செயலகத்தில் அலுவலகப் பணிகளைத் தொடங்கியதும் சில நாள்களாக அவருடைய நாற்காலியில் வெள்ளைத் துண்டு இடம் பெற்றிருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் நாற்காலியில் வெள்ளைத் துண்டு இடம்பெறுவது ஒரு விஐபி கலாசாரம் என விமர்சித்து, அந்த கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் குறிப்பிட்டு, 14 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிப்ரியா கங்குஜம் என்பவர், முதல்வர் விஜய்யை டேக் செய்து, தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடந்த மே 14 அன்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வேண்டுகோள் முறையானது என சிலரும், நாற்காலியில் வெள்ளைத் துண்டு இடம்பெறுவது அமருபவரின் ஆடையில் அழுக்குப் படியக் கூடாது என்பதற்காக மட்டுமே, ஆகையால் இந்த வேண்டுகோள் தேவையற்றது என்றும் மாறி மாறி சிலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.
எனினும், அந்தப் பதிவுக்குத் தமிழக அரசு தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை. ஆனால், முதல்வர் விஜய்யின் அலுவலகத்தில் நேற்று (மே 15) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்கள் குறித்து வெளியான புகைப்படங்களில் முதல்வர் நாற்காலியில் வெள்ளைத் துண்டு அகற்றப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, பலரும் சூழல் ஆர்வலரின் வேண்டுகோளுக்கு தமிழக முதல்வர் செவிசாய்த்துள்ளதாகக் கூறி பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், அதிகாரத்தின் அடையாளம் என்பதாக விமர்சிக்கப்பட்ட இந்த வெள்ளைத் துண்டைத் தனது நாற்காலியில் இருந்து முதல்வர் விஜய்தான் முதல்முறை நீக்கி புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளாரா என்றால், இல்லை, ஏற்கெனவே இருந்த முதல்வர்களில் பலரும் துண்டு இல்லாமலும் இருந்திருக்கின்றனர்.
இதற்கு முன்பு, இதே தலைமைச் செயலகத்தில், இதே முதல்வர் அறையில் அமர்ந்து செயலாற்றிய முதல்வர்கள் மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா, எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோரும் பலமுறை தங்கள் நாற்காலியில் வெள்ளைத் துண்டு இடம் பெறாத நிலையில் அலுவலகப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
நாற்காலியில் வெள்ளைத் துண்டு போர்த்துவது விஐபி கலாசாரத்தின் தொடர்ச்சியா? ஒவ்வொருவரின் தனிப்பட்ட வசதி தொடர்புடையதா? அல்லது சில நேரங்களில் இருக்கும்; இல்லாமலும் இருக்கும் என்ற பெரிதும் கவனத்தில் கொள்ளப்படாத ஒரு விஷயமா? எப்படியோ, இப்போது வெள்ளைத் துண்டும் ஒரு விஷயமாகியிருக்கிறது, இணையவெளியில்.
The removal of the white towel from TN CM Vijay's chair has become a major topic of discussion.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.