முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!
முதல்வர் விஜய்யுடன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் சந்தித்தபோது எடுக்கப்பட்ட விடியோ வெளியாகி சர்ச்சை.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன், மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் இன்று சந்தித்துப் பேசியது தொடர்பான விடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தலைமைச் செயலகத்தில், முதல்வர் அறையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட விடியோ அது. விடியோ மட்டுமல்ல, பின்னணியில் பேசுபவர்களின் குரலும் மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இந்த விடியோவை எடுத்தவரும், மாற்றுத்திறனாளிகள் அமைப்பைச் சேர்ந்தவர்தான். முதல்வர் விஜய்க்கு தெரிந்தே விடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு என்று கேட்கலாம். ஆனால் இது நிச்சயம் தவிர்க்கப்பட்டே ஆக வேண்டியது என்பது நிதர்சனம்.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்து, தவெக தலைவர் விஜய் முதல்வரானதுமுதல் பல்வேறு அமைப்பினரும் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசி, தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் ஸ்மிதா சதாசிவம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சிம்மச்சந்திரன் உள்ளிட்டோர் தமிழக முதல்வர் விஜய்யை இன்று சந்தித்துப் பேசினர்.
பொதுவாக, முதல்வர், அதிகாரிகளுடனான சந்திப்பின்போது புகைப்படம், விடியோக்கள் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. காரணம், இதுபோன்ற சந்திப்புகளின்போது பேசப்படும் விவரங்கள் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதுதான்.
ஆனால், இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட விடியோவில், மாற்றுத்திறனாளிகள் துறையில் ஆணையராக இருக்கும் ஒருவர் பற்றி, முதல்வரிடம் புகார் கூறப்பட்டுள்ளது. இதனை அறியாமல், அவர் விடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார். விடியோ மட்டுமல்லாமல், அங்கு பேசப்படுவதும் ஆடியோ பதிவாகி அதனை அவர் எடிட் செய்யாமல் அப்படியே சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து எழுந்துள்ள கேள்விகளில், ஒரு மாநில முதல்வர் அறையில் நடைபெறும் கூட்டத்தை விடியோ ரெக்கார்ட் செய்ய அனுமதி உண்டா? அதுவும் ஆடியோவுடன் சேர்த்து படமெடுக்கலாமா?
விடியோ எடுக்கும் நபருக்கு, அதன் விளைவுகள், ஆபத்துகள் பற்றி தெரியவில்லையா?
முதல்வரின் சந்திப்பின்போது விடியோ எடுக்க தலைமைச் செயலக வழிகாட்டு நெறிமுறைகள் அனுமதிக்கிறதா? என்பதே அவை.
இதுபோன்றவை தவிர்க்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். முதல்வரிடம் நேரடியாக ஒரு புகார் செல்கிறது, அதை வைப்பவர்களுக்கு ஆபத்துகள் நேரிடலாம். முதல்வருடனான ஆலோசனையில் பேசப்படுவது வெளிச்சத்துக்கு வருவது ஆட்சி அதிகாரத்துக்கு சரியல்ல என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.