அமைச்சரவையில் விசிக இடம்பெறுமா? திருமாவளவன் பதில்
அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து திருமாவளவன் பதிலளித்தது பற்றி...
தமிழக அமைச்சரவையில் இடம்பெற விசிகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. முதல்கட்டமாக முதல்வர் ஜோசப் சி. விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், இந்த வாரத்துக்குள் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் இணைய வேண்டும் அழைப்பு விடுத்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அயோத்திதாச பண்டிதரின் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது:
“தவெகவின் அழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த மே 8 ஆம் தேதி கூடிய விசிக உயர்நிலைக் கூட்டத்தில், பெரும்பாலானோர் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்றார்கள். இறுதியாக தலைவரின் முடிவுக்கு கட்டுப்படுவதாக உறுதி அளித்தனர்.
மறுநாள் கட்சியின் பொதுச் செயலாளர்கள், பொருளாளர் உள்ளிட்டோருடன் நடைபெற்ற ஆலோசனையில் அமைச்சரவையில் இடம்பெறாமல் நிபந்தனையற்ற ஆதரவு தர முடிவெடுத்தோம்.
முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு வேளச்சேரிக்கு வருகை தந்த விஜய், அவரது விருப்பத்தை தெரிவித்தார். தற்போது ஆதவ் அர்ஜுனா வழிமொழிந்துள்ளார்.
இதுதொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பிறகு முடிவை அறிவிப்போம்.
தவெக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவில்லை. திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்துதான் இரு இடங்களில் வெற்றி பெற்றோம்.
தற்போது வெளிப்படையாக தவெக தரப்பில் இருந்து அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்களின் அழைப்புக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அழைப்பு குறித்து விரைவில் முடிவை அறிவிப்போம்” எனத் தெரிவித்தார்.
Will the VCK join in the Cabinet? Thirumavalavan responds.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.