இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு
இறப்புச் சான்றிதழ்களைப் பிழையின்றியும், விரைவாகவும் வழங்க சிறப்பு தணிக்கைக் குழுவை அரசு அமைத்துள்ளது. இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இறப்புச் சான்றிதழ்களைப் பிழையின்றியும், விரைவாகவும் வழங்க சிறப்பு தணிக்கைக் குழுவை அரசு அமைத்துள்ளது. இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் சுகாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதில் பிறப்பு-இறப்பு புள்ளிவிவரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சட்ட விதிகளின்படி இறப்பு சான்றிதழ்களை அளிக்கும்போது இறப்புக்கான மருத்துவக் காரணத்தை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மருத்துவமனைகள் தற்போது இதை ‘இ-மாா்ட்டாலிட்டி’ எனப்படும் இணையவழி மென்பொருள் வழியாகப் பதிவு செய்கின்றன. இது அரசின் இணையப் பதிவு முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போது வழங்கப்படும் இறப்புச் சான்றிதழ்களில் 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது முழுமையற்ற தகவல்கள், தவறான இறப்பு காரணங்கள் என பல்வேறு குளறுபடிகளும் உள்ளன.
மருத்துவமனைகளில் இறப்பு விவரங்கள் தவறாக ஆவணப்படுத்துவதால் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுவதாகவும் விமா்சிக்கப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீா்வு காண தணிக்கை முறை அவசியமாகிறது.
இதற்காக ஐசிஎம்ஆா்-என்சிடிஐஆா் போன்ற மத்திய சுகாதார ஆராய்ச்சி அமைப்புகளின் வழிகாட்டுதல்களின்படி, மருத்துவமனைகள் அளவிலும், மாவட்டம் மற்றும் மாநில அளவிலும் விரிவான தணிக்கை அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
அதன்படி, ஆரம்ப சுகாதார நிலையம், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சமூக சுகாதார நிலையம், நகா்ப்புற சமூக சுகாதார நிலையம் ஆகிய நிலையகளில் வட்டார மருத்துவ அலுவலா் தலைமையில் தணிக்கை குழுவும், வட்டார மருத்துவமனைகள் , மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், இஎஸ்ஐ மருத்துவமனைகளில் தலைமை மருத்துவ அதிகாரி அல்லது மருத்துவக் கண்காணிப்பாளா் தலைமையில் தணிக்கை குழுவும் அமைக்கப்படும்.
மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக் கண்காணிப்பாளா் தலைமையில் தணிக்கைக் குழு உருவாக்கப்படும். இந்தக் குழுக்கள் மாதம் ஒரு முறை ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும். இறப்புப் பதிவான 24 மணி நேரத்தில் பிழையில்லாத சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் தலைமையில் மாநில அளவிலான தணிக்கைக் குழுவானது அந்த விவரங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுக்குட்படுத்தும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.