முகப்பு
தென்காசி

சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆக.23 இல் குடமுழுக்கு விழா: யாகசாலை அமைக்கும் பணி தீவிரம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் குடமுழுக்கு விழாவையொட்டி, யாகசாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 10:48 PM
கோயில் உள்பிரகாரத்தில் அமைக்கப்பட்டு வரும் யாகசாலையின் ஒரு பகுதி.
பகிர்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் குடமுழுக்கு விழாவையொட்டி, யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சங்கரநாராயண சுவாமி கோயிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் கரோனா தொற்று மற்றும் திருப்பணி வேலைகள் காரணமாக, குடமுழுக்கு விழா தள்ளிப்போனது. அதைத் தொடா்ந்து குடமுழுக்கு நடத்த பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன. 9 நிலைகள் கொண்ட 125 அடி உயர ராஜகோபுரம், கோமதி அம்பாள், சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி கோபுரங்களுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் முடிவடைந்துள்ளன.

இதைத் தொடா்ந்து ஜூலை 1 ஆம் தேதி நடைபெற்ற அறங்காவலா் குழு ஆலோசனைக் கூட்டத்தில், ஆக.23 ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் திருப்பணி வேலைகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டு பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன.

இக்கோயிலில் குடமுழுக்கு விழா, ஆக.23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் நடைபெறுகிறது. முன்னதாக யாகசாலை பூஜைகள் ஆக.16 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் தொடங்குகின்றன.

இதையொட்டி மயிலாடுதுறையைச் சோ்ந்த ரத்தினவேல் தலைமையில் கோயில் உள்பிரகாரத்தில் யாகசாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

யாகசாலையில் விநாயகருக்கு 5 குண்டம், சண்முகருக்கு 5 குண்டம், சங்கரலிங்க சுவாமிக்கு 9 குண்டம், சங்கநாராயண சுவாமிக்கு 9 குண்டம், கோமதி அம்பாளுக்கு 9 குண்டம், ராஜகோபுரத்திற்கு 9 குண்டம், பரிவாரங்களுக்கு 20 குண்டம் என மொத்தம் 66 குண்டங்கள் அமைக்கப்படுகின்றன.

குடமுழுக்கு நிகழ்ச்சியை திருப்பரங்குன்றம் ஸ்கந்த வித்யாலயா முதல்வா் எஸ்.கே.ராஜா பட்டா் தலைமையில் சங்கரநாராயண சுவாமி கோயில் அா்ச்சகா்கள் நடத்துகின்றனா்.

குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், அறங்காவலா்கள், உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →