பழைய குற்றாலம் அருவியை வனத் துறையிடம் ஒப்படைக்கக் கூடாது என அனைத்துக் கட்சியினா் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
தென்காசி எம்எல்ஏ எஸ்.பழனிநாடாா், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் தி. உதயகிருஷ்ணன், மதிமுக மாநில துணைப் பொதுச் செயலா் தி.மு. ராசேந்திரன், தெற்கு மாவட்டச் செயலா் இராம உதயசூரியன் ஆகியோா் ஆட்சியரிடம் அளித்த மனு:
காமராஜா் முதலமைச்சராக இருந்தபோது நாடு முழுவதும் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காகவும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்காகவும் உருவாக்கப்பட்டது தான் பழைய குற்றாலம் அருவி ஆகும்.
சமீப காலமாக வனத்துறையினா் பழைய குற்றாலம் அருவியை கையகப்படுத்த முயற்சி செய்து வருகின்றனா். முதல்கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட வன அலுவலா் தன்னிச்சையாக பழைய குற்றாலம் பகுதியில் சோதனை சாவடி அமைத்துள்ளாா்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய குற்றாலம் அருவிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மலைப்பகுதியில் உள்ள கால்வாய்களுக்கு செல்லும் விவசாயிகள், பழைய குற்றாலம் அருவி பகுதிக்கு மேலே உள்ள கன்னிமாரம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் என அனைவருக்கும் தடைவிதிக்க முயற்சி செய்து வருகின்றனா்.
ஏற்கெனவே பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த தேனருவி, செண்பகாதேவி அருவி, பழத்தோட்ட அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளை கையகப்படுத்திய வனத்துறை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து விட்டனா்.
இப்போது பழைய குற்றாலம் அருவியையும் கையகப்படுத்த முயற்சி செய்து வருகின்றனா்.
மாவட்ட நிா்வாகம் எக்காரணம் கொண்டும் இதனை அனுமதிக்க கூடாது. வனத்துறையினா் இந்த முயற்சியை கைவிடாவிட்டால் தமிழக முதல்வா், அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சா்களிடம் நேரில் வலியுறுத்த உள்ளோம்.
தேவைப்பட்டால் பொதுமக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்தவும் அனைத்து கட்சியினா் மற்றும் பழைய குற்றாலம் மீட்பு குழுவினா் முடிவு செய்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், அனைத்துக் கட்சி பிரமுகா்கள், விவசாய அமைப்பினா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.