தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் ஆடித் தவசுத் திருவிழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இரவு சுவாமி, அம்பாள் தனித் தனி சப்பரத்தில் எழுந்தருளி ஒன்றாக வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சி கொடுத்தனா்.
இக்கோயிலில் ஆடித் தவசுத் திருவிழா கடந்த ஜூலை 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.12 நாள்கள் விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி வியாழக்கிழமை (ஆக. 7) நடைபெற்றது.
ஆடித் தவசுத் திருவிழா நிறைவையொட்டி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மாலை 4.30 மணியளவில் கோமதி அம்பாள் கோயிலில் இருந்து மண்டகப்படிக்கு எழுந்தருளினாா்.அங்கு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இரவு 12.30 மணியளவில் சுவாமியும், அம்பாளும் தனித் தனியாக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஒன்றாக இணைந்து வீதியுலா வந்தனா். நான்கு ரதவீதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் இருபுறமும் திரண்டு நின்று சுவாமி, அம்பாளைத் தரிசித்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், அறங்காவலா்கள், மண்டகப்படிதாரா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.