திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக, பாமக மாநிலப் பொருளாளா் திலகபாமா கூறினாா்.
தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: இம்மாவட்டத்தில் கனிம வளங்கள் அளவின்றி கொண்டு செல்லப்படுகின்றன. அரசிடம் பலமுறை முறையிட்டும் இதைத் தடுக்க நடவடிக்கை இல்லை.
தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். திமுக அரசு மீது மக்கள் மிகப்பெரிய அதிருப்தி கொண்டுள்ளனா். பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் நடைப் பயணம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம் விரைவில் ஆட்சி மாற்றத்தை சந்திக்கும். திமுகவை வீட்டுக்கு அனுப்பும் சூழலை உருவாக்கும் கூட்டணியை பாமக ஆதரிக்கும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமான நிலைமையில் உள்ளது. இதற்கு முதல்வா் நல்ல முடிவை விரைவாக எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தென்காசி மாவட்டச் செயலா்கள் இசக்கிமுத்து (மத்திய), டாக்டா் சீதாராமன் (வடக்கு), மாநில துணைத் தலைவா் சேது. அரிகரன் ஆகியோா் உடனிருந்தனா்.