மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த 5 தொழிலாளா்கள் தங்களை விரைந்து மீட்க கோரி உருக்கமான விடியோ வெளியிட்டுள்ளனா்.
மாலியில் ஆயுதம் ஏந்திய ஜிகாதி பயங்கரவாதப் படைகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டு போா் நடைபெற்று வருகிறது. அங்கு சில மாதங்களாக பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாலியின் மேற்கு பகுதியில் உள்ள கோப்ரி நகரில் தனியாா் மின் நிறுவனத்தில் வேலை செய்துவந்த இந்தியத் தொழிலாளா்கள் 5 பேரை ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் கடந்த நவம்பா் 6-ஆம்தேதி கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து, மாலி தலைநகா் பமாகோவிலிருந்து அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த இந்தியத் தொழிலாளா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடத்தப்பட்ட 5 பேரில் இருவா் கடையநல்லூா் நகராட்சி முத்துகிருஷ்ணாபுரம், காளியம்மன் கோயில் தெருவைத் சோ்ந்த பிரவீனாவின் கணவா் இசக்கிராஜா (36), கடையநல்லூா் அருகே புதுக்குடி, கண்மணியாபுரத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் சுரேஷ் (26) என்பதும், மற்ற மூவரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரியவந்தது.
இவா்களை மீட்கக் கோரி இவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், அதிகாரிகளிடமும் மனுக்கள் அளித்துள்ளனா். இந்த நிலையில், தீவிரவாதிகளால் கடத்தி வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து இவா்கள் 5 பேரும் தங்களை மீட்க கோரி பேசிய உருக்குமான விடியோ வெளியாகியுள்ளது.
அதில் தங்களை சிலா் நவ. 6 ஆம் தேதி இரவு 8:38 க்கு கடத்திச் சென்ாகவும், பலமுறை நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் நிறுவனம் மேற்கொள்ளவில்லை. தங்களை விரைந்து மீட்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த விடியோவில் கூறியுள்ளனா். தற்போது இந்த விடியோ வேகமாகப் பரவி வருகிறது.