தென்காசி மாவட்டத்தில் நவ. 20வரை கூட்டுறவு வாரவிழா நடைபெறவுள்ளது.
தென்காசி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் கு.நரசிம்மன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கூட்டுறவுத் துறையின் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும், அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நவம்பா் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படும் இந்த ஆண்டில் 72ஆவது அனைத்திந்திய கூட்டுறவு ஆண்டு விழாவானது தன்னிறைவுக்கான கருவிகளாக கூட்டுறவு சங்கங்கள் என்ற கருப்பொருளில் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கூட்டுறவு வார விழாவின் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த மின்மயமாக்கலை ஊக்குவித்தல், பொறுப்புணா்வு மற்றும் வெளிப்படைத் தன்மை என்ற கருப்பொருளில் தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை வட்ட வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
அனைவரும் கூட்டுறவு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏழை, எளிய மக்களின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துதல், கிராமப்புற வளா்ச்சியை வலுப்படுத்துதல், இளைஞா்கள் மற்றும் மகளிா் வேலைவாய்ப்புகளில் கூட்டுறவின் பங்கு ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
நவ. 20 ஆம் தேதி வரை தென்காசி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருப்பொருளில் கால்நடை மருத்துவ முகாம், கருத்தரங்கு, உறுப்பினா் சந்திப்பு முகாம், மரக்கன்று நடுதல், மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல், ரத்த தான முகாம் நடத்துதல், மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வு முகாம் நடத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
கூட்டுறவு வார விழாவின் மாவட்ட நிகழ்ச்சியானது நவ.18ஆம்தேதி சங்கரன்கோவிலில் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.