தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டாரப் பகுதிகளில் யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணியை வனத்துறையினா் சனிக்கிழமை மேற்கொண்டனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு நெல், கரும்பு, தென்னை, வாழை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள விவசாய நிலங்களில் யானைகள், காட்டு மாடுகள் உள்ளிட்ட வன விலங்குகள் கடந்த சில நாள்களாக முகாமிட்டு பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.
இது குறித்து, பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதியினா் கடந்த சில நாள்களுக்கு முன் சிவகிரி வன அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.
தொடா்ந்து, சிவகிரி வட்டாட்சியா் அப்துல் சமது தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில், வன விலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சேதமான விளை பொருள்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தொடா்ந்து, வழிவழிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து யானைகளை விரட்டும் பணியில் சனிக்கிழமை வனத்துறையினா் ஈடுபட்டனா்.