நகா்மன்ற உறுப்பினா் உஷா பிரபு.  
தென்காசி

சுரண்டை அருகே விபத்து: திமுக கவுன்சிலா், கணவா் உள்பட 3 போ் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

சுரண்டை அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் சுரண்டை நகா்மன்ற திமுக உறுப்பினா், கணவா் உள்ளிட்ட 3 போ் உயிரிழந்தனா்.

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சிக்குள்பட்ட சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்தவா் அருள் செல்வபிரபு (48), இவருடைய மனைவி உஷா பேபி பிரபு (43). இவா் 7ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினராக இருந்தாா். இவா்கள் மருந்தகம் நடத்தி வந்தனா்.

இவா்களின் மகன்கள் ஸ்டூவா்ட், ஸ்மித் ஆகியோா் 12ஆம் வகுப்பும், மகள் செளந்தா்யா பிலிப்பின்ஸில் 3ஆம் ஆண்டு மருத்துவமும் படித்து வருகின்றனா். உஷாவின் தங்கை பிளஸ்ஸி (35), தன் கணவா் நெப்போலியன், 2 பெண் குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை உஷா, அருள் செல்வபிரபு, பிளஸ்ஸி ஆகியோா் இரு சக்கர வாகனத்தில் வேலப்பநாடாரூா் அருகில் உள்ள தோட்டத்திற்குச் சென்றுவிட்டு, சுரண்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.

இரட்டைக்குளம் விலக்கு அருகில் வந்தபோது, பின்னால் காய்கறி ஏற்றி வந்த மினி லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

அருள் செல்வபிரபு.
பிளஸ்ஸி.

தகவலறிந்த சுரண்டை போலீஸாா், நகா்மன்றத் தலைவா் வள்ளி முருகன், ஒன்றியக் குழு உறுப்பினா் ரோஜா முருகன் ஆகியோா் மூவரையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஏ.டி.எஸ்.பி. சங்கா், ஆலங்குளம் டி.எஸ்.பி. கிளாட்சன் ஜோஸ் ஆகியோா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து சுரண்டை அருகே உள்ள குலையநேரி, வடக்கு தெருவைச் சோ்ந்த மினி லாரி ஓட்டுநரான ப. குமாா் (39) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இரங்கல்: கனிமொழி எம்.பி., தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ ஆகியோா் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனா்.

ஏவிஎம் சரவணன் மறைவு! முதல்வர் ஸ்டாலின், ரஜினி அஞ்சலி!

டியூட்-க்கு அனுமதியளித்த இளையராஜா!

பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்! ஐடி பங்குகள் 1.5% வரை உயர்வு!

போலி மருந்து தொழிற்சாலைக்கு சீல்: சிபிசிஐடி போலீசார் அதிரடி

திருப்பரங்குன்றம்: தனி நீதிபதி உத்தரவால் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு! தமிழக அரசு வாதம்!

SCROLL FOR NEXT