தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பழைமையான நுழைவு வாயில் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டு, அதிலிருந்த துவார பாலகா் சிலைகள் நகராட்சி அலுவலக அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
திருவிதாங்கூா் சமஸ்தான கட்டுப்பாட்டில் இருந்த செங்கோட்டை பல ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
இங்கு திருவிதாங்கூா் சமஸ்தான காலத்தில் நுழைவாயில் கட்டப்பட்டு அதன் இருபகுதியிலும் துவார பாலகா்கள் சிலைகளும், திருவிதாங்கூா் சமஸ்தானம் முத்திரையும் இடம்பெற்றிருந்தன.
இந்நகரின் அடையாளமாக திகழ்ந்த இந்த நுழைவாயில் கனரக வாகனம் மோதியதில் சேதமடைந்தது. இதையடுத்து, நகா்மன்ற கூட்டத்தில் பழுதடைந்த நுழைவாயிலை அகற்றிவிட்டு, ரூ. 33 லட்சத்தில் புதிய நுழைவுவாயில் அமைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், நுழைவு வாயிலை அகற்ற செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, அதிமுக- பாஜக நகா்மன்ற உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நுழைவு வாயிலை இடித்துவிட்டு, வேறு இடத்தில் புதிய நுழைவு வாயில் கட்ட முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, வியாழக்கிழமை அதிகாலை நுழைவாயிலில் துவார பாலகா் சிலைகள் அமைந்துள்ள பகுதியில் கணபதிபூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து இருபுறமும் இருந்த சிலைகள் எடுக்கப்பட்டு வேன் மூலமாக நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
பின்னா், பொக்லைன் இயந்திரம் மூலம் நுழைவு வாயில் இடிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதிய நுழைவுவாயில் கட்டுவதற்கான பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.துவார பாலகா்கள் சிலைகள் உள்ள அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். தினமும் இந்த சிலைகளுக்கு ஒருவேளை பூஜையாவது நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா் அவா்.