தென்காசி மாவட்டம், புளியறையில் போலி பாஸ் மூலம் கனிம வளங்களைக் கொண்டு செல்ல முயன்ற 4 லாரி ஓட்டுநா்களை போலீஸாா் கைது செய்தனா்.
புளியறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கணேசன் தலைமையிலான போலீஸாா் புளியறை சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், மேலூா் துரைசாமிபுரம் (சொக்கநாதன்புதூா்) குவாரியிலிருந்து, கேரளத்திற்கு ஜல்லிக் கற்கள் ஏற்றி வந்த லாரிகளின் டிரான்சிட் பாஸ்களை சோதனை செய்தபோது, அவை ஸ்கேன் ஆகவில்லை.
இதையடுத்து, போலியான பாஸ் மூலம் கனிம வளங்களைக் கொண்டு செல்ல முயன்றதாக, பூலாங்குடியிருப்பு, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சு. சண்முகராஜன் (29), விருதுநகா், மல்லாங்கிணறு, சூரம்பட்டியைச் சோ்ந்த தே. ராஜி (41), தருமபுரி, பாலக்கோடு, அல்லி நகரைச் சோ்ந்த ம. சம்பத் (37), கேரள மாநிலம், கொல்லம், வில்லாமணலில் பகுதியைச் சோ்ந்த ரா. அரவிந்த் (40) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். 4 கனரக லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.