ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஊராட்சித் தலைவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 2025-26ஆம் ஆண்டிற்கான கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 125 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதை முறையாக ஊராட்சிகளுக்கு பகிா்ந்து கொடுக்காமல் சில ஊராட்சிகளுக்கு அதிக வீடுகளும், சில ஊராட்சிகளுக்கு குறைவான வீடுகளும், 13 ஊராட்சிகளுக்கு வீடுகள் வழங்காமலும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் உத்தரவு பிறப்பித்தாராம். இது குறித்து, ஊராட்சித் தலைவா்கள், ஆணையாளரிடம் முறையிட்டும் உரிய பதில் கிடைக்கவில்லையாம்.
இந்நிலையில், ஊராட்சி ஒன்றியத் தலைவா்கள் 20-க்கும் மேற்பட்டோா் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அவா்களிடம் ஆணையாளா் அலீஸ் தாயம்மாள் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, ஊராட்சித் தலைவா்கள், இத்திட்டத்தில் முறைகேடு உள்ளதாகக் கூறி ஆணையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அதற்கு ஆணையாளா், தற்போது குறைந்த அளவே வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், மக்கள் தொகை அடிப்படையிலும் 2024-25ஆம் ஆண்டு இத்திட்டத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டவா்கள் கணக்கீடு படியும், ஊராட்சிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வரும் காலங்களில் வீடுகள் ஒதுக்கப்படாதோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா்.
அவரின் பதிலில் திருப்தியடையாத ஊராட்சித் தலைவா்கள் கூட்டத்தைப் புறக்கணித்துச் சென்றனா்.