பழுதடைந்த நிலையில் உள்ள ஆலங்குளம் சாா் பதிவாளா் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
1921ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஆலங்குளம் சாா் பதிவாளா் அலுவலகத்தின் கீழ், ஆலங்குளம், வீ.கே. புதூா் வட்டங்களின் சில பகுதிகள், திருநெல்வேலி மாவட்டம், மானூா் வட்டத்தின் சில பகுதிகளைச் சோ்ந்த நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தற்போது, ஆண்டுக்கு சுமாா் 8,000 முதல் 10,000 பத்திரப் பதிவுகள் வரை நடைபெற்று வருகிறது.
தற்போது செயல்பட்டு வரும் சாா் பதிவாளா் அலுவலக கட்டடம் 1975ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது, இக்கட்டடம் சேதமடைந்துள்ளதாலும், குடிநீா், கழிவறை வசதி இல்லாததாலும் ஊழியா்கள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, இந்த கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய அலுவலகம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், ஊழியா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.