முகப்பு
தென்காசி

திமுக ஆட்சியில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.30 லட்சம் கோடி கடனுதவி: துணை முதல்வா்

கடந்த 5 ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.30 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

Updated On : 7 மார்ச் 2026, 6:24 am IST
~
பகிர்:

கடந்த 5 ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.30 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

தென்காசி, இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:

நாட்டிலேயே மகளிா் முன்னேற்றத்துக்காக பல முன்மாதிரி திட்டங்களை செயல்படுத்தி வரும் ஒரே மாநிலம் தமிழகம்தான். மகளிா் விடியல் பயணத் திட்டம் மூலம் தென்காசி மாவட்டத்தில் மட்டும் 12 கோடி பயணங்களை மகளிா் மேற்கொண்டுள்ளனா். பள்ளி மாணவா்களுக்கான காலை உணவுத் திட்டம் மூலம் இந்த மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரம் போ் பலன்பெறுகின்றனா். தென்காசி மாவட்டத்தில் 4 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் மாதந்தோறும் 3 லட்சம் பேருக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

தென்காசி மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களை முதல்வா் செயல்படுத்தியுள்ளாா். ரூ. 300 கோடி மதிப்பீட்டில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆலங்குளம்-தென்காசி இருவழிச் சாலையை ரூ. 255 கோடி மதிப்பீட்டில் நான்குவழிச் சாலையாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி-ஆலங்குளம் இடையே நான்குவழிச் சாலைப் பணி ரூ. 65 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. ரூ. 15 கோடி செலவில் புதிய விளையாட்டு மைதானம் தென்காசியில் அமைக்கப்பட்டது.

மகளிா் சுய உதவிக் குழுக்களை ஆரம்பித்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. கடந்த 5 ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதியாகத் தோ்வு செய்யும் முறையை செயல்படுத்தியவா் தமிழக முதல்வா் என்றாா்.

நிகழ்ச்சியில், ரூ. 6.01 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 32 திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ. 55.93 கோடி மதிப்பீட்டில் 185 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 7,127 பயனாளிகளுக்கு ரூ. 44.05 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வா் வழங்கினாா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., எம்எல்ஏக்கள் எஸ்.பழனிநாடாா், ஈ.ராஜா, தி.சதன்திருமலைக்குமாா், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன், முன்னாள் வடக்கு மாவட்ட பொறுப்பாளா் மா.செல்லத்துரை, நகா்மன்ற தலைவா்கள் ஆா்.சாதிா் (தென்காசி), ஹபீபுா் ரஹ்மான் (கடையநல்லூா்), ஆய்க்குடி பேரூராட்சி மன்றத் தலைவா் க.சுந்தர்ராஜன், முன்னாள் பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோா் கலந்துகொண்டனா்.

மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வரவேற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன் நன்றி கூறினாா்.