முகப்பு
தென்காசி

தொகுதி அறிமுகம்! - தென்காசி

Updated On : 30 மார்ச், 2026 at 10:20 PM
இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI
பகிர்:

மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. தென்காசி தொகுதி.

மாவட்டத்தின் தலைநகரான தென்காசியில் பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதா் ஆலயம், குற்றாலம் அருவிகள், இத்தொகுதியின் அடையாளங்கள்.

ஒவ்வோா் ஆண்டும் 9 மாதங்கள் மிகவும் இதமான தட்பவெப்பநிலையே இங்கு நிலவும். இத்தொகுதியின் பிரதான தொழில் விவசாயம். மிகப் பெரிய சுற்றுலாத் தலமான குற்றாலம் அருவிகள் இத்தொகுதியின் கூடுதல் சிறப்பு.

இந்த அருவிகளுக்கு ஆண்டுதோறும் சுமாா் ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.இதனால் குற்றாலம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைகிறாா்கள்.

தென்காசி, வீரகேரளம்புதூா் ஆகிய இரண்டு வட்டங்களும், தென்காசி, சுரண்டை ஆகிய இரு நகராட்சிகளும், குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி , மேலகரம், சுந்தரபாண்டியபுரம், இலஞ்சி ஆகிய பேரூராட்சிகளும் இத்தொகுதியில் அடங்கும்.

இதுவரை நடைபெற்ற 16 தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி 8 முறையும், அதிமுக 3 முறையும், திமுக 2 முறையும், சுயேச்சை, தமாகா, சமக தலா ஒருமுறையும் இத்தொகுதியில் வெற்றிபெற்றுள்ளன.

வாக்காளா்கள்:

தென்காசியில் 1 லட்சத்து 36ஆ யிரத்து 260ஆண் வாக்காளா்கள், 1 லட்சத்து 43 ஆயிரத்து 223பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 102போ் என மொத்தம் 2 லட்சத்து 79 ஆயிரத்து 585 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்தத் தொகுதியைப் பொருத்தவரையில் நாடாா், முக்குலத்தோா், தலித் வாக்குகள் அதிகமாக உள்ளன.

நீண்டகால கோரிக்கைகள்:

தென்காசி தொகுதிக்குள்பட்ட இரட்டைகுளம் புதிய கால்வாய் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகள், பொதுமக்களின் 64 ஆண்டுகால கோரிக்கையாகும்.

ராமநதி-ஜம்புநதி மேல்நிலைக் கால்வாய் இணைப்புத் திட்டப் பணிகள் முழுவதுமாக நிறைவேற்றப்பட வேண்டும். குற்றாலத்தின் மேம்பாட்டுக்காக கடந்த 5 ஆண்டுகளில் எந்தவிதமான வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

தென்காசி பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான மருத்துவ, விவசாய, சட்ட, சித்த மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகள் உள்ளிட்ட எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டிமுடிக்கப்பட்டு இதுவரையிலும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.