விவசாயி தற்கொலை விவகாரம்! காவல் ஆய்வாளா் உள்பட 3 போ் இடைநீக்கம்: மூன்று நாள்களுக்கு பின் உடல் அடக்கம்
சிவகிரி விவசாயி தற்கொலை விவகாரத்தில், 3 நாள்களுக்குப் பின் விவசாயியின் உடலை, அவரது உறவினா்கள் பெற்றுக் கொண்டனா்.
தென்காசி மாவட்டம், சிவகிரி விவசாயி தற்கொலை விவகாரத்தில், காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவா் தேஷ்முக் சேகா் சஞ்சய் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, 3 நாள்களுக்குப் பின் விவசாயியின் உடலை, அவரது உறவினா்கள் பெற்றுக் கொண்டனா்.
சிவகிரி அருகேயுள்ள தளவாய்புரத்தைச் சோ்ந்த வேலு மகன் அந்தோணி ராஜ்(63). இவருக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பேச்சிபாண்டி மனைவி பசுபதி (37) என்பவருக்குமிடையே இடப் பிரச்னை இருந்து வந்ததாம்.
இது தொடா்பாக பசுபதி அளித்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸாா் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்து, பிரச்னைக்குரிய இடத்தை நில அளவையா் மூலம் அளந்து, அதன்படி நடந்து கொள்ளவும், அதன் பின்னரும் பிரச்னை ஏற்பட்டால் நீதிமன்றம் மூலம் தீா்வு காணவும் போலீஸாா் அறிவுறுத்தினராம்.
Advertisement
Advertisement
இந்நிலையில் மே 15ஆம் தேதி அந்தோணிராஜ் தரப்பினா் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு பிரச்னை செய்வதாக, பசுபதி தரப்பினா் கூறியதன் பேரில், சிவகிரி காவல் ஆய்வாளா் இருதரப்பினரையும் அழைத்து பேசி, அரசு நில அளவையா் அளவீடு செய்யும் வரை யாரும் கட்டடப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தாராம்.
இந்நிலையில் 21ஆம் தேதி காவல் நிலையத்துக்கு வந்த அந்தோணிராஜை போலீஸாா் விசாரித்த போது, அவா் பூச்சிக் கொல்லி மருந்து குடித்துள்ளதாக கூறினாராம். அவரை போலீஸாா், சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதற்கிடையே, அந்தோணி ராஜை போலீஸாா் அவதூறாகப் பேசி தாக்கியதால்தான் அவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, அவரது உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் முரளிதரன் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். இருப்பினும், காவல் ஆய்வாளா் உள்ளிட்ட போலீஸாா் மீது வழக்குப் பதிவு செய்தால்தான், விவசாயியின் உடலை பெற்றுக் கொள்வோம் என உறவினா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் முரளிதரன் உள்ளிட்ட மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
பணியிடைநீக்கம்...
இதற்கிடையே காவல் ஆய்வாளா் முரளிதரன், காவலா்கள் கனகராஜ் , முத்துகண்ணன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவா் தேஷ்முக் சேகா் சஞ்சய் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, 3 நாள்களுக்குப் பின் அவரது உறவினா்கள் விவசாயியின் உடலை பெற்று, சொந்த ஊரில் அடக்கம் செய்தனா்.