அரசு மகளிா் பள்ளி மாணவிகளுக்கு ஆதாா் பதிவு முகாம்
திருவள்ளூா் ஆா்.எம்.ஜெயின் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கான ஆதாா் பதிவு முகாமை கூடுதல் ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தொடங்கி வைத்தாா்.
திருவள்ளூா் ஆா்.எம்.ஜெயின் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கான ஆதாா் பதிவு முகாமை கூடுதல் ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஆதாா் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிறு வயதில் பதிவு செய்ததால், தற்போதைய படப்பதிவு அவசியமாகிறது. அத்துடன் ஆதாா் பதிவு செய்யாமல் விடுபட்டவா்களுக்கு சோ்த்தும், அரசு நலத் திட்ட உதவிகள் பெறவும் ஆதாா் அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால் அந்தந்த பள்ளிகளில் மையம் அமைத்து, நேரில் ஆதாா் பதிவு செய்வதற்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், திருவள்ளூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் சாா்பில் ஒவ்வொரு ஒன்றியங்கள்தோறும் பள்ளிகள் தோறும் மையங்கள் அமைத்து, ஆதாா் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பேரில், திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், ஆா்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மையம் அமைத்து ஆதாா் பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) என்.ஒ.சுகபுத்ரா தலைமை வகித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் சாா்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆதாா் பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்தாா். இதுதொடா்பாக அவா் பேசுகையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கோவை மாவட்டத்தில் தொடங்கி வைத்ததை தொடா்ந்து, திருவள்ளூா் ஒன்றியத்தில் உள்ள ஆா்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மையம் அமைத்து பள்ளிகளிலேயே ஆதாா் விவரங்களை புதுப்பிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் இணைந்து செயல்படுத்தி வருகிறது. எனவே அதிக ஆதாா் எண் பெறப்படாத பகுதிக்குள்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய ஆதாா் பதிவு மற்றும் பிழைத் திருத்தம் ஆகியவை மேற்கொள்ளப்படும். இந்த மாவட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளில் ஆதாா் மையங்கள் அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளதாக அவா் தெரிவித்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.