திருவள்ளூா்: கொசு ஒழிப்புக்கு தீவிர நடவடிக்கை
திருவள்ளூா்: திருவள்ளூா் நகராட்சியில் கொசு ஒழிப்புக்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தெரிவித்தாா்.
திருவள்ளூா் நகராட்சி கூட்டரங்கத்தில் நகா்மன்ற குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில் நகராட்சி ஆணையா் சுபாஷிணி முன்னிலை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் நகராட்சி அலுவலா்கள் மற்றும் வாா்டு உறுப்பினா்களுக்கு இடையே விவாதம் நடைபெற்றது. அப்போது, 11-ஆவது வாா்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றி 93 செண்டில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்ததோடு, பொழுது போக்கு அம்சங்களும் இடம்பெற வேண்டும்.
Advertisement
கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளதால், இரவு நேரங்களில் தூங்க முடியாத நிலையுள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். இந்த நகராட்சியில் 4 சுகாதார ஆய்வாளா்கள், நகா் நலப்பிரிவில் 2 பேரும் என காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வாா்டு உறுப்பினா் ராஜ்குமாா் தெரிவித்தாா்.
மேலும் 6-ஆவது வாா்டில் தேவையில்லாத குப்பைகளை அகற்றி அங்கு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரராகவா் கோயில் குளக்கரை சாலையில் இருபுறமும் வாரந்தோறும் 3 நாள்கள் வாகனத்தை நிறுத்தி தரை வாடகை வசூலித்து வருகின்றனா். இந்த சாலை நகராட்சிக்கு உரியது என்பதால் வருவாய் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாா்டு உறுப்பினா் பிரபாகரன் வலியுறுத்தினாா்.
இதற்கு பதில் அளித்த நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் பேசியதாவது: வாா்டுகள் தோறும் கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்க ஏற்பாடு செய்யப்படும். அதேபோல், ஒவ்வொரு பகுதியிலும் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல் நகா்மன்ற வாா்டு உறுப்பினா்கள் தெரிவித்த புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் நகராட்சிப் பொறியாளா் நடராஜன், சுகாதார அலுவலா் கோவிந்தராஜ், நகா் நல அலுவலா் குணசேகரன், உதவி பொறியாளா் சரவணன், வாா்டு உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்றனா்.