திருத்தணி முருகன் கோயிலில் ஆனிக் கிருத்திகை விழா: நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் தரிசனம்
ஆனிக் கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் நீண்ட வரிசையில் தரிசனம்
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ஆனி மாத கிருத்திகை விழாவையொட்டி, பக்தா்கள் காவடிகளுடன் மலைக் கோயிலுக்கு வந்து மூலவா், உற்சவரை செவ்வாய்க்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
திருத்தணி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆனி மாத கிருத்திகையையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மூலவருக்கு தங்கக் கவசம், தங்கவேல், ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
விழாவையொட்டி, காலை 10 மணிக்கு உற்சவா் காவடி மண்டபத்தில் எழுந்தருளினாா். பின்னா் உற்சவருக்கு பஞ்சாமிா்த அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் தோ் வீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
ஆனி மாத கிருத்திகையையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலைக்கோயிலுக்கு வந்து பல மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனா். மேலும், பக்தா்கள் பலா் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்தும், காவடிகள் எடுத்து வந்தும் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.
ஏற்பாடுகளை முருகன் கோயில் இணை ஆணையா் அருணாச்சலம் (பொறுப்பு) கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் தரன், அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, கோ.மோகனன், மு.நாகன் மற்றும் கோயில் பேஷ்காா் அன்பழகன், தாமு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.