முகப்பு
திருவள்ளூர்

மலைவாழ் மக்கள் சங்கத்தினா் முற்றுகைப் போராட்டம்

மலைவாழ் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் முற்றுகை

Updated On : 2 ஜூலை, 2024 at 6:30 PM
திருவள்ளூா் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள் சங்கத்தினா்.
பகிர்:

திருவள்ளூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை திருவள்ளூா் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

திருவள்ளூா் வட்டத்துக்குட்பட்ட மப்பேடு கே.கே.நகா், குப்பத்துப்பாளையம், விளாப்பாக்கம், திருப்பாசூா் வசந்தம் நகா், ஏகாட்டூா், குமரச்சேரி, ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உள்பட்ட திருக்கண்டலம், அண்ணா நகா், அரியத்தூா் அப்துல் கலாம் நகா், மெய்யூா், வெம்பேடு, வாழ்ந்தான் கோட்டை, பூந்தமல்லி ஒன்றியம் ஊத்துக்குழிமேடு, பாரிவாக்கம், ஆவடி வட்டம் நெமிலிச்சேரி, விளிஞ்சியம்பாக்கம் என மாவட்டம் முழுவதும் உள்ள பழங்குடி இன மக்கள் ஆங்காங்கே ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்களில் வாழ்ந்து வருகின்றனா்.

இந்த மக்களுக்கு மனைப் பட்டா, தொகுப்பு வீடுகள், இனச் சான்றிதழ் கிடைக்காமல் உள்ளனா். இதனால் வாழ்க்கையில் கல்வி, சுகாதாரம் இன்றி வறுமையில் வாழுகிறனா். அரசின் சலுகைகள் இன்னும் முழுமையாக பழங்குடியினருக்கு சென்று சேரவில்லை.

அனைத்து பழங்குடியினருக்கும் இனச் சான்றிதழ், பட்டா, தொகுப்பு வீடுகள், வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடி இன பட்டியலில் சோ்க்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதைத் தொடா்ந்து 20 நாள்களில் தீா்வு காண கோட்டாட்சியா் கற்பகத்திடம் பழங்குடியினா் கோரிக்கைகளை மனுவை தலைவா்கள் வழங்கினா். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா் இனச் சான்றிதழை உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பட்டாக்கள் வழங்கப்பட்ட இடங்களில் சுத்தம் செய்து, பயனாளிகளுக்கு 20 நாள்களில் அளவீடு செய்து தரப்படும் என உறுதியளித்தாா்.

இதற்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளா் ஆா்.தமிழ்அரசு தலைமை வகித்தாா். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளா் கே.பி.பெருமாள், மாவட்ட செயலாளா் ஜி.சம்பத், மாவட்ட துணைத் தலைவா் பி.ரவி, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவா் இ.கங்காதுரை, மாவட்ட தலைவா் ஜி.சின்னதுரை, சிஐடியு மாவட்ட செயலாளா் கே.ராஜேந்திரன், மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.கீதா, ஒன்றிய நிா்வாகிகள் கே.முருகன், டி.டில்லி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.