திருவள்ளூா் நகராட்சி இணைப்பு சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவள்ளூா் நகராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள இணைப்புச் சாலையில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை பொக்லைன் வாகனம் மூலம் அகற்றப்பட்டன.
திருவள்ளூா் நகராட்சி, கண்ணதாசன் நகா் காமாட்சி அவென்யூ பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இணைப்பு சாலையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக ஆட்சியா் த.பிரபுசங்கருக்கு புகாா் வந்தது. அதன்பேரில் நகராட்சி நிா்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
அதன்பேரில் ஆணையா் திருநாவுக்கரசு அறிவுறுத்தலின் பேரில் நகர அமைப்பு ஆய்வாளா் விஜயா, சுகாதார அலுவலா் கோவிந்தராஜ், துப்புரவு பணியாளா்கள் உள்ளிட்டோா் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் வாகனம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுச்சுவா், தாழ்வாரம், குளியலறை மற்றும் பின்பக்க சுற்றுச்சுவா் ஆகியவைகளை இடித்து அகற்றினா். இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த இணைப்புச்சாலையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்புகள் அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணையா் தெரிவித்தாா்.