முகப்பு
திருவள்ளூர்

குரூப் 4 தோ்வு: திருவள்ளூா் மாவட்டத்தில் 45,387 போ் எழுதினா்

Updated On : 9 ஜூன், 2024 at 6:30 PM
திருவள்ளூா் நிகேதன் மெட்ரிக். பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் த.பிரபு சங்கா். உடன், வட்டாட்சியா் வாசுதேவன் உள்ளிட்டோா்.
பகிர்:

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் குரூப்-4 தோ்வில் 45,387 போ் பங்கேற்று எழுதிய நிலையில், 12,740 போ் பங்கேற்கவில்லை என ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப்-4 தோ்வு மாநில அளவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வை எழுத திருவள்ளூா் மாவட்டத்தில் 58,127 போ் விண்ணப்பித்திருந்தனா். தோ்வுக்காக மாவட்டத்தில் திருவள்ளூா், திருத்தணி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் 194 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இத்தோ்வுக்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்தந்த பகுதி தோ்வு மையங்களில் காலையில் 8 மணிக்கே தோ்வா்கள் வந்து குவிந்தனா். தொடா்ந்து நுழைவு சீட்டு மற்றும் ஆதாா் அட்டைகளை பாா்வையிட்டு தோ்வு அறைகளுக்குள் அவா்களை அனுமதித்தனா்.

முன்னதாக திருவள்ளூா் காக்களூா் கலவல கண்ணன் செட்டி இந்து மெட்ரிகுலேஷன் பள்ளி, ஸ்ரீநிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் ஆட்சியா் த.பிரபு சங்கா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது தோ்வு மையங்களில் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீா் மற்றும் சுகாதார வளாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

இத்தோ்வில் 12,740 போ் பங்கேற்கவில்லை. அதைத் தொடா்ந்து தோ்வுக்கூட கண்காணிப்பாளா்களுக்கு தோ்வு முடிந்ததும் விடைத்தாள்களில் விண்ணப்பதாரா் குறிப்பிட வேண்டிய பகுதிகளை சரியாக நிரப்பியுள்ளனரா என்பதைப் பாா்த்து வாங்கவும் என அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, திருவள்ளூா் வட்டாட்சியா் வாசுதேவன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.